
"சொந்த வீட்டிலேயே எனக்குத் துன்புறுத்தல் நடக்கிறது" - நடிகை தனுஸ்ரீ தத்தாவின் கண்ணீர் வீடியோ பரபரப்பை கிளப்புகிறது!
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகையும், நடிகர் விஷாலின் திரைப்படமான 'தீராத விளையாட்டு பிள்ளை' மூலம் தமிழர்கள் மத்தியில் அறிமுகமான தனுஸ்ரீ தத்தா, தனது சொந்த வீட்டிலேயே தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகக் கூறியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கதறி அழுதபடி, "தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள்!" என உருக்கமாக பதிவிட்டுள்ளார். தனுஸ்ரீயின் அழுகைக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
வீடியோ
தனது வீட்டில் மர்மநபர்கள் தொடர்ந்து தொந்தரவு தருவதாக கூறுகிறார்
தனது வீட்டின் மேல்கூரை மற்றும் கதவுகளுக்குப் பின்புறம் தொடர்ந்து கடுமையான சத்தங்கள் கேட்டுவருவதாக தனுஸ்ரீ அந்த வீடியோ பதிவில் புகார் தெரிவித்துள்ளார். இது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடப்பதாகவும், சிலர் அவர் வாசலுக்கு வந்து தொந்தரவு செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொலைபேசியில் காவல்துறையை அணுகியதையடுத்து, நேரில் வந்து புகார் அளிக்குமாறு கூறப்பட்டதாகவும், உடல்நிலை காரணமாக உடனடியாக செல்ல முடியவில்லை என்றும் தனுஸ்ரீ கூறுகிறார். "நான் நாளை அல்லது மறுநாள் செல்வேன். என் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து துன்புறுத்தலால் சோர்வடைந்துள்ளேன்."
பாதுகாப்பு
உடல்-மன நலம் பாதிப்பு, வீட்டிற்குள் பாதுகாப்பற்ற சூழல் என்கிறார்
மன அழுத்தம், பதற்றம் மற்றும் நாள்பட்ட சோர்வால் பாதிக்கப்பட்டுள்ள தனுஸ்ரீ, வீட்டிலேயே வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார். வீட்டு வேலைக்காரர்களிடம் மோசமான அனுபவம் ஏற்பட்டதாகவும், பாதுகாப்பின் பற்றாக்குறை அதிகமாக உள்ளதாகவும் அவர் விளக்குகிறார்.
#MeToo
#MeToo போராளியான தனுஸ்ரீ தத்தா
இந்தியாவில் #MeToo இயக்கத்தைத் தூண்டியவர்களில் ஒருவர் என கருதப்படும் தனுஸ்ரீ, 2008-ஆம் ஆண்டு *ஹார்ன் ஓகே ப்ளீஸ்* படப்பிடிப்பு போது நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 2018-இல் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் விவாதத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. எனினும், மும்பை காவல்துறை 2019-இல் தாக்கல் செய்த அறிக்கையில், நானா படேகர் மீது குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. தனுஸ்ரீ தத்தா 2004 ஃபெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றவர். ஆஷிக் பனாயா அப்னே, தோல், பாகம் பாக் உள்ளிட்ட ஹிட் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக 2013-ல் SuperCops vs Super Villains தொலைக்காட்சிச் தொடரில் நடித்தார்