Loading...
தொடர்ந்து 4 மணி நேரம் மொபைலில் கேம் விளையாடியதால் வந்த வினை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஷகிலா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஷகிலா

தொடர்ந்து 4 மணி நேரம் மொபைலில் கேம் விளையாடியதால் வந்த வினை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஷகிலா

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2026
11:55 am

செய்தி முன்னோட்டம்

விஜய் தொலைக்காட்சியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் குடும்ப ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பிரபல நடிகை ஷகிலா, கழுத்தில் கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களை தொடர்ந்து, தான் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்பது குறித்து நடிகை ஷகிலா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மூலம் விளக்கம் அளித்துள்ளார். ஒரே பக்கமாக சாய்ந்து படுத்துக்கொண்டு நீண்ட நேரம் மொபைலை பயன்படுத்தியதே இந்த அறுவை சிகிச்சைக்கு முதன்மை காரணம் எனக் கூறியுள்ளார்.

விபரீதம்

செல்போன் பயன்பாட்டால் வந்த விபரீதம்

இதுகுறித்து அவர் பேசுகையில், "ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை என் கைப்பேசியில் கேம் விளையாடுவேன். இடைவேளையில் டீ குடிக்க மட்டுமே எழுந்திருப்பேன்".

"அதுமட்டுமின்றி யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல மணி நேரம் ரீல்ஸ் பார்ப்பேன். இதனால் என் கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, ₹3 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ள அவருக்கு, படுக்கையிலிருந்து எழுவது மற்றும் உணவு உண்பது போன்ற அடிப்படை அன்றாட வேலைகளைச் செய்யக் கூடப் பராமரிப்பாளர்களின் உதவி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தனது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.

எச்சரிக்கை

ரசிகர்களுக்கு ஷகிலா விடுத்த எச்சரிக்கை

மொபைல் என்பது மிக பயனுள்ள ஒரு சாதனம் என்றாலும், அதை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது எனத் தனது ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போனை பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற வீடியோக்கள் மற்றும் கேம்களில் பல மணி நேரத்தை வீணடித்து உடநலனைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT