படப்பிடிப்பில் அநாகரீகப் பேச்சு: தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பரபரப்பு புகார்
செய்தி முன்னோட்டம்
'பேச்சுலர்' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை திவ்யா பாரதி, தான் நடித்து வந்த தெலுங்குத் திரைப்படம் கோட்டின் இயக்குநர் நரேஷ் குப்பிலி மீது படப்பிடிப்பு தளத்தில் பெண்கள் வெறுப்புடன் அநாகரீகமாக பேசியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நடிகை திவ்யபாரதி தற்போது தெலுங்கில் நரேஷ் குப்பிலி இயக்கி வந்த கோட் படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பின்போது இயக்குநருக்கும் திவ்யபாரதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், இயக்குநர் நரேஷ் குப்பிலி இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரே இயக்கப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திலிருந்து நீக்கப்பட்ட பின், நரேஷ் குப்பிலி சமூக வலைதளத்தில் திவ்யபாரதியை மறைமுகமாக விமர்சித்து ஒரு பதிவிட்டிருந்தார். இதற்கு திவ்யபாரதி நேரடியாக பதிலளித்தார்.
குற்றச்சாட்டுகள்
திவ்யபாரதியின் குற்றச்சாட்டுகள்
இயக்குநர் நரேஷ் குப்பிலி குறித்து திவ்யபாரதி தனது 'X' பக்கத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டுள்ளார்: "இந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலும் அதே முறையைப் பின்பற்றினார், பெண்களை மீண்டும் மீண்டும் அவமதித்தார்." "இதைப் பார்த்தும் படத்தின் ஹீரோ அமைதியாக இருந்தார். இந்த கலாச்சாரம் இன்னும் ஒரு நாள் நிலைத்திருக்க அனுமதித்ததுதான் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. பெண்கள் கேலிக்கு ஆளாகாத பணியிடங்களை நான் தேர்வு செய்கிறேன், ஒவ்வொரு குரலும் முக்கியம், மரியாதை பேரம் பேச முடியாத இடங்களை நான் தேர்வு செய்கிறேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல; ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் இது எனது தரநிலை!" என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.