தூக்கத்திலேயே பிரிந்த உயிர்! 27 வயதில் பிரபல நடிகை அனன்யா ராஜ் மரணம்; சோகத்தில் திரையுலகம்
செய்தி முன்னோட்டம்
இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல நடிகை அனன்யா ராஜ், கடந்த ஜூலை 15 ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 27 வயதான அனன்யா ராஜ், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல் மற்றும் மனரீதியான அசௌகரியங்களால் அவதிப்பட்டு வந்த நிலையில், தூக்கத்திலேயே அவரது உயிர் அமைதியாகப் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தி திரையுலகினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தினர் உருக்கம்
"ஒரு போர்வீரனைப் போலப் போராடினார்" - குடும்பத்தினரின் உருக்கமான பதிவு
அனன்யா ராஜின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனன்யா கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல் மற்றும் மன ரீதியான சவால்களை சந்தித்து வந்தார்.
ஒரு போர்வீரனைப் போல அதிலிருந்து மீண்டு வர அவர் போராடினார். அவர் ஒரு தைரியமான பெண்.
அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இந்தத் துயரமான நேரத்தில் தங்களின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறும் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திரைப்பயணம்
அனன்யா ராஜின் திரைப்பயணம் மற்றும் முக்கியத் திரைப்படங்கள்
மும்பையை சேர்ந்த அனன்யா ராஜ், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 7 ஹவர்ஸ் டு கோ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தி ஃபைனல் எக்சிட் (2017) மற்றும் விக்ரம் பட் இயக்கத்தில் வெளியான கோஸ்ட் (2019) ஆகிய திரைப்படங்களில் நடித்து இந்தி சினிமா ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றார்.
பாலிவுட் திரையுலகில் தனது திறமையை நிரூபித்த பின்னர், தென்னிந்தியத் திரைப்படங்களிலும் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.
தென்னிந்திய படங்கள்
தென்னிந்தியத் திரைப்படங்கள் மற்றும் மதராஸி கேங் திரைப்படம்
தெலுங்குத் திரையுலகில் நவீன் சந்திராவுடன் இணைந்து தக்கடே லே என்ற திரைப்படத்தில் அனன்யா ராஜ் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவான மதராஸி கேங் என்ற திரைப்படத்தில் சரிதா என்ற கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருந்தார். 2023'லேயே வெளியிட திட்டமிட்டிருந்த இந்த படம் பல்வேறு காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.
அஷ்மித் பட்டேல் மற்றும் அத்யாயன் சுமன் ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த இந்தத் திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கிய ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பின்பற்றுபவர்களைக் கொண்டு அவர் பிரபலமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.
இரங்கல்
திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் ஆழ்ந்த இரங்கல்
நடிகை அனன்யா ராஜ் மரணமடைந்து ஒரு மாதம் கழித்து இந்த செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களைப் பகிர்ந்து பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இளம் வயதிலேயே திறமையான ஒரு நடிகையை இழந்துவிட்டதாகத் திரையுலகப் பிரபலங்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
அவரது ஆன்மா சாந்தியடைய பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.