விஜய்யின் 'ஜன நாயகன்' ட்ரைலர் வெளியாகும் நாள் இதுதானா?
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்வுகள் குறித்து தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த வாரம், படத்தின் தயாரிப்பு குழு படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கவிருப்பதாக அறிவித்தது. அதோடு தளபதி திருவிழா என்ற பெயரில் விஜய்யின் ரசிகர்களுக்கான கொண்டாட்ட நிகழ்வையும் அறிவித்தது. வரும் டிசம்பர் 27, விஜய்யின் சினிமா பயணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. சுமார் 1,00,000 ரசிகர்கள் வரை பங்கேற்க வாய்ப்புள்ளதால், இது கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்படலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியும் கசிந்துள்ளது.
ட்ரைலர் வெளியீடு
ட்ரைலர் வெளியீடு மற்றும் படத்தின் விவரங்கள்
டிசம்பர் 31 அன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையில் படத்தின் முதல் பாடல் 'தளபதி கச்சேரி' ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இசை வெளியீட்டிற்கு முன்னர் அடுத்த பாடலை வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த வாரத்தில் இருக்கக்கூடும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையில் இது விஜய்க்கு ஐந்தாவது படம். அதே வேளையில் 'ஜன நாயகன்' படத்தின் தமிழக விநியோக உரிமை சுமார் ₹105 கோடிக்கு விற்பனையாகி, இது தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.