LOADING...
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ரசிகர்கள் கூட்டத்தில் நிலைதடுமாறி விழுந்த நடிகர் விஜய்
விஜயை காண ரசிகர்கள் விமான நிலைய முனையத்தில் குவிந்திருந்தனர்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ரசிகர்கள் கூட்டத்தில் நிலைதடுமாறி விழுந்த நடிகர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 29, 2025
07:33 am

செய்தி முன்னோட்டம்

மலேசியாவில் நடைபெற்ற தனது கடைசி படமான 'ஜன நாயகன்' ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி நிலைதடுமாறி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மலேசியாவிலிருந்து சென்னை திரும்பிய விஜயை காண ரசிகர்கள் விமான நிலைய முனையத்தில் குவிந்திருந்தனர். அவர் வெளியே வந்ததும், ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு முண்டியடித்தனர். பாதுகாப்பு வளையத்தையும் மீறி ரசிகர்கள் நெருங்கியதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், தனது காரை நோக்கி சென்ற விஜய் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரைத் தூக்கி பிடித்து பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக இந்த தள்ளுமுள்ளுவில் அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மலேசியா

மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட சாதனை

முன்னதாக, கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்ற 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்றனர். மலேசியாவில் அதிக மக்கள் கலந்துகொண்ட ஆடியோ வெளியீட்டு விழா என்ற அடிப்படையில் இது 'மலேசிய சாதன புத்தகத்தில்' இடம்பெற்றது. "எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக, நான் சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்" என மேடையில் விஜய் உருக்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிக்கும் கடைசி படமான 'ஜனநாயகன்' வரும் 2026 ஜனவரி 9ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு பிறகு அவர் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய் தரப்பில் எவ்வித அறிக்கையும் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement