LOADING...
விஸ்வரூபம் எடுக்கும் குடும்பச் சண்டை; திடீரென சபரிமலைக்கு மாலை அணிந்த பிரபல நடிகர்
ரவி மோகன் திடீரென சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளார்

விஸ்வரூபம் எடுக்கும் குடும்பச் சண்டை; திடீரென சபரிமலைக்கு மாலை அணிந்த பிரபல நடிகர்

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2026
01:45 pm

செய்தி முன்னோட்டம்

மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து விவகாரம் நீதிமன்றத்தில் பொதுவெளியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் திடீரென சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளார். அண்மையில் கண்ணீர் மல்க உணர்ச்சிப்பூர்வமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தற்போது ஆன்மீகப் பாதையில் கவனம் செலுத்தி வருவது திரைத்துறையினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய பிரஸ் மீட்டில் பேசிய நடிகர் ரவி மோகன், தனது விவாகரத்து வழக்கு சட்டப்பூர்வமாக முடிவுக்கு வரும் வரை திரைப்படங்களில் நடிப்பதே இல்லை என்றும், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள்

ரவி மோகன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

பத்திரிகையாளர் சந்திப்பில் தனது திருமண வாழ்க்கை முறிந்ததற்கான காரணங்கள் குறித்தும், தனக்கு நேர்ந்த அவலங்கள் குறித்தும் ரவி மோகன் பல்வேறு திடுக்கிடும் புகார்களைப் பட்டியலிட்டார். பிரிந்த பிறகு தனது குழந்தைகளைத் தன்னைச் சந்திக்க விடாமல் ஆர்த்தி தடுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார். திருமண முறிவுக்குத் தான் மட்டுமே காரணம் எனச் சித்தரித்து இணையத்தில் கடுமையான சைபர் புல்லியிங் செய்யப்படுவதாகக் வேதனைப்பட்டார். தங்களின் கூட்டு வங்கிக் கணக்கிலிருந்து சிறிய தொகையை எடுத்ததற்குக் கூடத் தன்னிடம் கணக்குக் கேட்கப்பட்டு, பொருளாதார ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், தனது தோழியும் ஆன்மீகக் குணப்படுத்துபவருமான கெனிஷாவுடன் தன்னை இணைத்துப் பேசப்பட்டதால் ஏற்பட்ட வதந்திகள் காரணமாக, அவர் தற்போது தன்னை விட்டு விலகிவிட்டதாகவும் ரவி தெரிவித்தார்.

விமர்சனம்

திரையுலகில் வெடித்த ஆதரவும் எதிர்ப்பும்

ரவியின் இந்த வெளிப்படையான பேச்சுகள் இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. ஆண்கள் உரிமை ஆர்வலர்கள் பலரும் ரவிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், ஆதாரங்கள் இல்லாமல் பொதுவெளியில் மனைவியைக் குற்றம் சாட்டுவதற்குக் காரசாரமான விமர்சனங்களும் எழுந்துள்ளன. ரவியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆர்த்தி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ சுந்தர் ஆர்த்திக்குத் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளார். கடைசியாக சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்திருந்த ரவி மோகன் கைவசம் ஜீனி, காரத்தே பாபு உள்ளிட்ட பல முக்கியப் படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement