நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து அவரே வெளியிட்ட புதுத்தகவல்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
கடந்த 2015 ஆம் ஆண்டு, எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம், முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார் நடிகர் பிரபாஸ். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அனுஷ்கா. இவர்கள் இருவரும் ஏற்கனவே தெலுங்கு படவுலகில் பிரபலமான ஜோடி. தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்ததால், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து இருவரும் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில், பிரபாஸ், இயக்குநர் ஓம் ராவுத்தின் 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஜூன் 16-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் ராமர் பாத்திரத்தில் பிரபாஸும், சீதை கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகை கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர்.
கண்டிப்பாக திருப்பதியில் தான் திருமணம்
அனுஷ்காவுடன் கிசு கிசுக்கள் ஓய்ந்த நிலையில், தற்போது பிரபாஸும், கீர்த்தி சனோனும் காதலிப்பதாக செய்திகள் பரவ தொடங்கின. இது குறித்து வெளிப்படையாக கீர்த்தி சனோனும், பிரபாஸும் மறுத்த நிலையில், இந்த திரைப்படம் ப்ரோமோஷனுக்காகவும், திருப்பதியில் சாமி தரிசனம் செய்யவும் படக்குழுவினர் வந்திருந்தனர். ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திருப்பதியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், பிரபாஸ் தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரசிகர் ஒருவர், பிரபாஸிடம் எப்போது திருமணம் என்று கேட்க, அதற்கு அவர், "கல்யாணம் என்றாவது ஒரு நாள் நடக்கும். ஆனால் கண்டிப்பாக திருப்பதியில் தான் என்னுடைய திருமணம் நடக்கும்" என்று தெரிவித்துள்ளார். இதை கேட்ட பிரபாஸின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.