7000 கோடி வசூல் செய்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர்
2009-ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதாரின் முதல் பாகம் வெளியானது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்து. இதனையடுத்து 13 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' உலகமெங்கும், டிசம்பர் 16 -ஆம் தேதி பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்தது. பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. இது அவதார் முதல் பாகத்தின் தொடர்ச்சியே என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் 52௦௦௦ திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. சுமார் 160 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
உலகளவில் வெறும் 10 நாட்களில் 7000 கோடி வசூல் சாதனை
இந்தியாவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு இப்படம் திரையரங்குகளில் வெளிவந்தன. தனியார் நிறுவன அறிக்கையின்படி, இந்தியாவில் மட்டும் படத்தை வெளியிட்ட பத்தே நாட்களில் சுமார் முந்நூறு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது த்ரிஷ்யம் 2, பிரம்மாஸ்திரா மற்றும் காஸ்மீர் ஃபைல்ஸ் போன்ற படங்களில் மொத்த நாள் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் வரும் நாட்களில் இந்த படம் ஐந்நூறு கோடிக்கும் மேல் வருவாயை ஈட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 250 மில்லியன்கள் வசூல் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் 600 மில்லியன்களை கடந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7000 கோடிகளை கடந்து வசூலை வாரி குவித்துள்ளது.