57-வது சர்வதேச திரைப்பட விழா: காந்தாரா படத்திற்காக சிறந்த நடிகர் விருதை தட்டி சென்ற ரிஷப் ஷெட்டி
செய்தி முன்னோட்டம்
கோவாவில் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி 9 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று வந்த 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இனிதே முடிவடைந்துள்ளது. கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகச் செயலாளர் சஞ்சல் குமார், விழா இயக்குநர் அசுதோஷ் கோவரிகர் மற்றும் சர்வதேச நடுவர் குழுத் தலைவர் ஆனந்த் எல். ராய் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், தியாகோ குயெடெஸ் இயக்கிய அக்வி சிறந்த திரைப்படத்திற்கான தங்க மயில் விருதை வென்றது. கன்னடத் திரைப்படமான காந்தாரா: எ லெஜண்ட் - சாப்டர் 1 படத்திற்காக நடிகர் ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருதையும், சிறப்புக் குறிப்பு அங்கீகாரத்தையும் பெற்று அசத்தினார்.
பட்டியல்
முழு விருது பட்டியல் வெளியீடு
எல்லைகளற்ற கதைகள் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இவ்விழாவில், தி மெல்ட்டவுன் படத்திற்காக மாயா ஓ ரூர்க் சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருதையும், விசிடேஷன் படத்திற்காக வோல்கர் ஸ்க்லோன்டார்ஃப் சிறந்த இயக்குநருக்கான விருதையும் தட்டிச் சென்றனர்.
மேலும், சிறந்த அறிமுகத் திரைப்படமாக தி கோல்டன் ஏஜ் (இயக்குநர் பெரெஞ்சர் தூயின்), சிறப்பு நடுவர் விருதாக தி ரிவர் டிரெய்ன் (லொரென்சோ ஃபெரோ மற்றும் லூகாஸ் விக்னாலே), இந்தியத் திரைப்படத்தின் சிறந்த அறிமுக இயக்குநராக ஹனுமான் அன்ஷ் படத்திற்காக டாக்டர் விஷால் சதுர்வேதி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த வெப் சீரிஸ் விருதை மேட் இன் இந்தியா: எ டைட்டன் ஸ்டோர மற்றும் ICFT-யுனெஸ்கோ காந்தி பதக்கத்தை ஃபெய்சல் சோய்சல் இயக்கிய ரஹ்மா திரைப்படமும் வென்றுள்ளன.
வரவேற்பு
தமிழ் படங்களுக்கு கிடைத்த வரவேற்பு
இவ்விழாவில் திரையிடப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு குறித்துப் படைப்பாளிகள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை, சப்டைட்டில்களைப் படித்துக்கொண்டே வெளிநாட்டினரும் ரசித்துச் சிரித்தது ஆச்சரியமளித்ததாகவும், மாணவர்கள் மற்றும் இளம் படைப்பாளிகள் படத்தைப் பார்த்துவிட்டுத் தங்கள் தாத்தா-பாட்டிகளுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் தயாரிப்பாளர் கலை அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நியூ ஹொரைசன்ஸ் பிரிவில் திரையிடப்பட்ட அறிவு திரைப்படம் பெண்கள் முன்னேற்றக் கருத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்து தேசிய விருதுக்குத் தகுதியானது எனப் பாராட்டப்பட்டதுடன், இவ்விழா அங்கீகாரத்தின் மூலம் திரையரங்க விநியோகஸ்தர் கிடைக்க உதவியதாக இயக்குநர் சத்யசிவா கூறியுள்ளார்.
பாராட்டு
ஸ்க்ரோல் மற்றும் கூடு பாராட்டு
முழுக்க முழுக்க ஒரு ஸ்மார்ட்போனின் கோணத்தில் நகரும் ஸ்க்ரீன் மூவி பரிசோதனை முயற்சியாக உருவாகி, யுனெஸ்கோ-காந்தி பதக்க விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஸ்க்ரோல் படத்தைப் பார்த்த பலர், தங்கள் செல்போன் பயன்பாட்டு நேரத்தைக் குறைத்துக்கொள்வதாகக் கூறியதாகவும், அடுத்த ஆண்டு திரையரங்க வெளியீட்டிற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் கண்ணன் எஸ். தெரிவித்துள்ளார்.
மேலும், பறவைக் கூட்டைக் காக்க 35 நாட்கள் மின்சாரமின்றி வாழ்ந்த தமிழக கிராம மக்களின் கதையைச் சொல்லும் கூடு திரைப்படம் காலா பிரீமியர்ஸ் பிரிவில் 85 சதவீத இருக்கைகள் நிரம்பி அபார வரவேற்பைப் பெற்ற நிலையில், விழாப் படம் என்பதால் மெதுவாக இருக்கும் என நினைக்காமல் அனைத்துத் தமிழ் மக்களும் திரையரங்குகளில் இப்படத்தைக் கொண்டாட வேண்டும் என இயக்குநர் ஜோயல் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.