துல்கர் சல்மானின் 11 ஆண்டு கால திரையுலக பயணம்; அவரின் மறக்கமுடியாத தமிழ் படங்களின் பட்டியல்
நடிகர் துல்கர் சல்மான், திரையுலகில் கால் பதித்து, இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகின்றது. இந்நேரத்தில், தமிழ் மொழியில் அவர் நடித்த சில வெற்றி படங்களின் பட்டியல் இதோ: வாயை மூடி பேசவும்: இது தான், தமிழில் துல்கரின் அறிமுகப் படம். நஸ்ரியாவுடன் இணைந்து, பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்திருந்தார். படத்தின் பாடல்கள் வெற்றிபெற்ற அளவு படம் வெற்றியடையவில்லை என்றாலும், துல்கரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. மகாநதி: நடிகை சாவித்திரி பற்றிய படமான மகாநதி, தேசிய விருது வென்றது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் விருது பெற்று இருந்தாலும், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்த துல்கரின் நடிப்பு, பலரின் கவனத்தை ஈர்த்தது, பலரால் பாராட்டவும் பட்டது.
ஓகே கண்மணி முதல் சீதா ராமம் வரை:
ஓகே கண்மணி: நித்யாமேனனும், துல்கரும் இணைந்து நடித்திருந்த இந்த படத்தை இயக்கியவர் மணிரத்னம். இளமை காதலை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், 'ஆதி' கதாபாத்திரத்தில், துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் துல்கர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தில் ஒரு டிஜிட்டல் திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் துல்கர். தேசிங் பெரியசாமி இயக்கிய இந்த படத்தில் ரிது வர்மா,'விஜய் டிவி' ரக்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். ஹே சினாமிகா: டான்ஸ் மாஸ்டர் பிருந்தா முதன்முறையாக இயக்கிய இந்த படத்திற்கு, பிருந்தாவின் முதல் தேர்வாக துல்கர் இருந்துள்ளார். அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்திருந்தனர். இவற்றுடன் சீதா ராமம், குரூப் போன்ற வேற்றுமொழி படங்களும் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.