ஷிப்ராக்கெட்டை கைப்பற்றும் திட்டம் எதுவும் இல்லை, முதலீட்டாளர்களை எச்சரித்த ஸோமாட்டோ
பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லாஜிஸ்டிக்ஸ் சேவை நிறுவனமான ஷிப்ராக்கெட்டை (Shiprocket), இந்திய உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸோமாட்டோ (Zomato) 2 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் கைப்பற்றவிருப்பதாகத் தகவல் பரவி வந்தது. பல்வேறு செய்தி நிறுவனங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அந்த தகவலை மறுத்து புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், செய்திகளில் குறிப்பிடப்படுவது போல ஷிப்ராக்கெட் நிறுவனத்தை கையகப்படுத்தும் எந்த முடிவிலும் ஸோமாட்டோ இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். மேலும், இது போன்ற தகவல்கள் சந்தையில் தங்களது நிறுவனத்தின் மீது தாக்கம் ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும், முதலீட்டாளர்களை எச்சரிக்கவுமே இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது ஸோமாட்டோ.
ஷிப்ராக்கெட்டில் ஸோமாட்டோவின் முதலீடு:
மேலும் தங்களுடைய அறிவிப்பில், ஷிப்ராக்கெட்ட மட்டுமின்றி வேறு எந்தவொரு நிறுவனத்தையும் கையகப்படுத்தும் திட்டமும் ஸோமாட்டோவிடம் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். எனினும், ஷிப்ராக்கெட் நிறுவனத்தில், இன்ஃபோ எட்ஜ், தொஸேக் மற்றும் லைட்ராக் ஆகிய நிறுவனங்களைப் போல ஸோமாட்டோவும் 185 மில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே, அப்போது குரோஃபர்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பிளின்க்இட் நிறுவத்தை ரூ.4,447 கோடி மதிப்பில் கையகப்படுத்தியது ஸோமாட்டோ. இந்த செய்திகளைக் கடந்து, தங்களது முதலீட்டாளர்களிடமிருந்து 75-100 மில்லியன் டாலர்களை வரை முதலீட்டைத் திரட்டும் நடவடிக்கையில் ஷிப்ராக்கெட் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.