அதிக சம்பளம் பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் முன்னணியில் ஸெரோதா நிறுவனர்கள்
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறும் நிறுவனர்களாகியிருக்கிறார்கள் ஸெரோதா (Zerodha) பங்கு வர்த்தக ஸ்டார்ப்அப் நிறுவனத்தின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் நிகில் காமத். கடந்த நிதியாண்டில் (FY2022-2023) ஸெரோதா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் ரூ.195.4 கோடியை சம்பளத்திற்கு ஈடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிறுவனர்களான நிதின் மற்றும் நிகில் காமத் இருவரும் தனிப்பட்ட முறையில் தலா ரூ.72 கோடியைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஸெரோதா நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும், நிதின் காமத்தின் மனைவியுமான சீமா பாட்டிலுக்கு கடந்த நிதியாண்டு மட்டும் ரூ.36 கோடி சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வேணு மாதவுக்கு ரூ.15.4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.
ஸெரோதா நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம்:
இந்திய ஸ்டார்ப்அப் நிறுவனங்களிலேயே மிகவும் லாபகரமான நிறுவனமாக இயங்கி வருகிறது ஸெரோதா. மேலும், பங்கு வர்த்தகச் சேவை வழங்கு வரும் நிறுவனங்களில் அதிக பயனாளர்களுடன் முன்னணியிலும் இருந்து வந்தது அந்நிறுவனம். ஆனால், கடந்த சில மாதங்களாக ஸெரோதா தளத்தில் ஏற்படும் சின்ன சின்ன தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, தங்கள் வாடிக்கையாளர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினரை இழந்திருக்கிறது அந்நிறுவனம். இதன் காரணமாக 6.48 மில்லியன் பயனாளர்களுடன் ஸெரோதா இரண்டாவது இடத்தைப் பிடிக்க, 6.63 மில்லியன் பயனாளர்களுடன் க்ரோ (Grow) பங்குவர்த்தக சேவை நிறுவனம் தற்போது முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த சின்ன பின்னடைவைக் கடந்து ஆண்டை விட இந்த ஆண்டு அதன் வருவாய் 38.5% அதிகரித்து ரூ.6,875 கோடியாகவும், லாபம் 39% அதிகரித்து ரூ.2,907 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.