வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்ததற்கான முக்கிய காரணங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை (அக்டோபர் 26) அன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது. வர்த்தகத்தின் போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 72,514.57 புள்ளிகள் வரை கீழே இறங்கியது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகள் வரை சரிந்து 22,387.35 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது. மேலும் பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 1 சதவீதத்திற்கும் மேல் சரிவைக் கண்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.
கச்சா எண்ணெய்
6 மாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை மற்றும் பணவீக்க அச்சம்
சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கவலை எழுந்துள்ளது.
இதனால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு பேரல் ஒன்றுக்கு $115 வரை உயர்ந்து காணப்படுகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், எண்ணெய் விலை உயர்வு நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு போர்
மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் பதற்றமும் சவுதி தாக்குதல்களும்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் போர் பதற்றம் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு இரண்டாவது முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ஏமனின் ஹூதி அமைப்பினர் சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களை சவுதி வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்த போதிலும், அப்பகுதியில் நிலவும் தீவிர ராணுவ மோதல்கள் காரணமாக உலகளாவிய நிதி சந்தைகளில் பெரும் உறுதியற்ற தன்மை நிலவி வருகின்றது.
அமெரிக்கா
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் கூட்டம் மற்றும் டாலர் மதிப்பு
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதக் கொள்கை முடிவை அறிவிக்க உள்ள நிலையில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் பணவீக்க அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமல் உயர் மட்டத்திலேயே தொடரக்கூடும் என்ற கணிப்புகள் வலுத்துள்ளன.
இதனிடையே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா சரிந்து 94.96 ஆகக் குறைந்ததும் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கியக் காரணமாக அமைந்தது.