
செபியிடம் உள்ள ரூ.25,000 கோடி சஹாரா முதலீட்டாளர்கள் நிதியானது யாரைச் சேரும்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முக்கியமான வணிகக் குழுமங்களுள் ஒன்றான சஹாரா வணிக குழுமத்தின் நிறுவனர் சுபத்ரா ராய் நீடித்த உடல்நலக் கோளாறுகள் காரணமாக கடந்த வாரம் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், பத்தாண்டுகளுக்கு முன் சஹாரா வணிகக் குழுமத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்குக் திருப்பியளிக்க செபியிடம் கொடுக்கப்பட்ட ரூ.25,000 கோடி என்னவானது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
2010-ம் ஆண்டு சஹாரா ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சஹாரா ஹவுசிங் முதலீட்டு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும் விதிமுறைகளை மீறி OFCD (Optionally Fully Convertible Bonds) முறையில் 3 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இந்த முறைகேடான நிதி திரட்டல் தொடர்பாக அந்த இரு நிறுவனங்கள் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வணிகம்
ரூ.25,000 கோடியை செபியிடம் அளித்த சகாரா குழுமம்:
அந்த வழக்கின் முடிவில், சஹாரா குழுமத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு திருப்பயளிக்க வேண்டிய தொகையாக ரூ.25,000 கோடியை செபியிடம் சஹாரா குழுமம் அளிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
அந்நிறுவனங்களில் மேற்கூறிய வகையில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் செபியிடம் விண்ணப்பித்து தங்களுடைய முதலீட்டுப் பணத்தை 15% வட்டியுடன் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அப்போதே அறிவிக்கப்பட்டது.
ஆனால், 11 ஆண்டுகளுக்கு மேலாகியும் 2.5 முதலீட்டாளர்களுக்கு ரூ.230 கோடி வரையிலான முதலீட்டுப் பணம் மட்டுமே திருப்பியளிக்கப்பட்டதாகத் தெரிவித்தது செபி.
மேலும், மேற்கூறிய இரு சஹாரா நிறுவனங்களிலும் யார் யார் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதனை தாங்களாகக் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்தது செபி.
இந்தியா
முதலீட்டுப் பணத்தை திருப்பியளிக்க நடவடிக்கை:
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் சஹாரா முதலீட்டாளர்களுக்கான முதலீட்டுப் பணத்தைத் திருப்பியளிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த புதிய இணையப்பக்கம் ஒன்று துவக்கப்பட்டது.
இதுவரை அந்த இணையப்பக்கத்தின் மூலம் 18 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டுப் பணத்திற்காக விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மீதமிருக்கும் ரூ.25,000 கோடியை மத்திய அரசு consolidated fund of india கணக்கிற்கு மாற்றும் வழிகளைக் குறித்து பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்னும் அனைத்து முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பயளிக்கப்படாத நிலையில், CFI-க்கும் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியே CFI கணக்கிற்கு அந்தப் பணத்தை மாற்றினாலும், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திரும்பப்பெறும் வகையிலான வசதிகளும் சேர்த்தே ஏற்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.