நவம்பர் 1 (நாளை) முதல் அமலாகவிருக்கும் நிதி சார்ந்த மாற்றங்கள்!
ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நிதி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் அல்லது மேற்கொள்ளப்படும். இன்று அக்டோபர் மாதம் முடிவுற்று, நாளை நவம்பர் தொடங்கவிருக்கும் நிலையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான நிதி சார்ந்த மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகள் என்ன? சிலிண்டர் விலை: இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்படும் LPG சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. LPG மட்டுமல்லாது PNG மற்றும் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் CNG எரிவாயுக்களின் விலையும், மாதத்தின் முதல் நாளே நிர்ணயிக்கப்படும். தீபாவளியை முன்னிட்டும், ஐந்து மாநில் தேர்ந்தல்களை முன்னிட்டும் இந்த முறை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் குறைக்கப்படும் அல்லது அதிகரிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி இ-சலான் விதிமுறை:
குறைந்தபட்சம் ரூ.100 கோடி மதிப்புடைய வணிக நிறுவனங்கள், தங்களுடைய ஜிஎஸ்டி சலான்களை நவம்பர் 1ம் தேதியிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் இ-சலான் தளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டியது அவசியம் என முன்பே அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க இன்றே கடைசி நாள்: முன்னர் நாம் ஏதாவது ஒரு எல்இசி பாலிசி எடுத்திருந்து, அது காலாவதியாகியிருந்தால், அதனை புதுப்பிக்க அக்டோபர் 31ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் அந்த கால அவகாசம் நிறைவடைவதைத் தொடர்ந்து, இதற்கு பின் காலாவதியான எல்ஐசி தேதிகள் புதுப்பிக்கப்படமட்டாது.
பங்குசந்தை பரிவர்த்தனைக் கட்டணம் உயர்வு:
நவம்பர் 1ம் தேதி முதல் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் பிரிவில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்தவிருக்கிறது மும்பை பங்குச் சந்தை. இது குறித்த அறிவிப்பினை கடந்த அக்டோபர் 20ம் தேதி அந்த அமைப்பு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காப்பீடுதாரர்களுக்கு KYC கட்டாயம்: நவம்பர் 1ம் தேதி (நாளை) முதல் காப்பீடுதாரர்களுக்கு KYC (Know Your Customer) செய்வதை கட்டாயமாக்கியிருக்கிறது, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம். ஒரு காப்பீட்டின் உரிமை கோரலின் போது இந்த செயல்பாடானது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.