மக்களே உஷார்..ஸ்விக்கியில் உலவும் போலி டோமினோஸ்!
ஸ்விக்கியில் உள்ள போலி டோமினோஸ் பீட்சா விற்பனை நிலையங்கள் குறித்து பயனர்கள் புகார் அளித்த நிலையில், ஸ்விக்கி நிறுவனம் அதற்கு பதிலளித்துள்ளது. பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியில், 'Domino's' என்று தேடினால் பல முடிவுகளைக் காட்டுகிறது. அவற்றில் பலவும் போலி டோமினோஸ் பீட்சா கடைகள். ஒரிஜினல் டோமினோஸ் பீட்சா பிராண்டைப் போலவே சிறிய மாற்றங்களுடன் உள்ளன. இவ்வாறு, டோமினோஸ் பீட்சா பெயரில் போலி பிராண்டுகள் மூலம் விற்பனை செய்யப்படுவது குறித்து பல பயனர்கள் ட்விட்டரில் புகார் கூறியுள்ளனர்.
ஸ்விக்கி நிறுவனத்திடம் முறையிடும் வாடிக்கையாளர்கள்; ஸ்விக்கியின் பதில்
குறிப்பாக கொல்கத்தாவை சேர்ந்த ரவி ஹண்டா என்ற பயனர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டில்," எனது முகவரிக்கு அருகில் பல டோமினோஸ் பீட்சா கடைகள் இருப்பதை கவனிக்க முடியும்" எனத்தெரிவித்துள்ளார். "இருப்பினும், அவை அனைத்தும் வாடிக்கையாளரை ஏமாற்ற, சிறு எழுத்துப்பிழைகளுடன் போலியாக செயல்படுகின்றன". "ஒரு உணவகம் "டோமினோ பிஸ்ஸா" என்றால், மற்றொன்று "டோமினோஸ் பிஸ்ஸா" என்றும் பெயரிடப்பட்டுள்ளன என்பதைக் காணமுடிகிறது" எனத்தெரிவித்துள்ளார். "தெளிவாக இது ஒரு மோசடி. இதில் ஒன்று மட்டுமே உண்மையானது. இதை ஏன் அனுமதிக்கிறீர்கள்?" என்று ரவி தனது எக்ஸ் பதிவில் ஸ்விக்கி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். இந்தப் பதிவுக்குப் பதில் அளித்துள்ள ஸ்விக்கி நிறுவனம், ரவி ஹண்டாவின் பின்கோடையும் பகிருமாறு கோரி, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.