Loading...
ஒரே நாளில் பல டிரில்லியன் டாலர் காலி; அமெரிக்க பங்குச் சந்தையில் ஏஐ பங்குகள் கடும் வீழ்ச்சி
அமெரிக்க பங்குச் சந்தையில் ஏஐ பங்குகள் கடும் வீழ்ச்சி

ஒரே நாளில் பல டிரில்லியன் டாலர் காலி; அமெரிக்க பங்குச் சந்தையில் ஏஐ பங்குகள் கடும் வீழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2026
11:00 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த அதிர்ச்சித் தோல்வியைத் தொடர்ந்து, அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் தொழில்நுட்பப் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. வர்த்தகத்தின் ஒரே நாளில் முதலீட்டாளர்களின் பல டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு சரிந்து சாம்பலாகியுள்ளது. முன்னணி பிக்டெக் நிறுவனங்கள் மட்டுமன்றி, நஷ்டத்தில் இயங்கும் டெக் நிறுவனங்கள், அதிகக் கடன் சுமை கொண்ட நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்களின் பங்குகளும் இந்த சரிவில் சிக்கி பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அத்துடன் வால்மார்ட் போன்ற பாதுகாப்பான பங்குகளின் மதிப்பும் கணிசமாகக் குறைந்து முதலீட்டாளர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதலீட்டாளர் அச்சம்

ஏஐ தரவு மையங்களின் மீதான கட்டுப்பாடுகளும் முதலீட்டாளர்களின் அச்சமும்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுத் துறை மற்றும் தரவு மைய விரிவாக்கத்தின் மீதான கண்காணிப்பு தீவிரமடையும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே பரவியுள்ளது.

குறிப்பதாக டெக்சாஸ் போன்ற முக்கிய மாநிலங்களில் புதிய தரவு மையங்களின் கட்டுமானங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியானது தொழில்நுட்ப முதலீட்டாளர்களை பெரிதும் கலக்கமடைய செய்துள்ளது.

மேலும் ஏஐ உள்கட்டமைப்புக்காக செய்யப்பட அதிகப்படியான முதலீடுகளுக்கு போதிய வருவாய் மற்றும் லாபம் உடனடியாகக் கிடைக்குமா என்ற சந்தேகமும் பங்குச் சந்தையின் இந்த சரிவுக்கு வழிவகுத்துள்ளது.

சிறிய நிறுவனங்கள்

சிறிய நிறுவனங்கள் மற்றும் ஆபத்தான முதலீட்டுப் பங்குகளில் பரவிய விற்பனை அலை

தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடங்கிய இந்த சரிவு, அதிக கடன் சுமையைக் கொண்ட சிறிய நிறுவனங்களின் செயல்பாட்டையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.

சிறிய நிறுவனங்களை உள்ளடக்கிய ரஸ்ஸல் 2000 குறியீடு 4.5% சரிந்து சந்தையின் திருத்த மண்டலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இலாபமற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் 7.7%-மும், சந்தையில் அதிகளவில் ஷார்ட் செய்யப்பட்ட பங்குகள் 8%-மும் ஒரே நாளில் சரிந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கடுமையாகக் குலைத்துள்ளன.

இதற்கிடையே பிரபல மொமண்டம் இடிஎஃப் நிதிகளின் மதிப்பும் 8.2% சரிந்து 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகான மிக மோசமான வர்த்தக பதிவை சந்தித்துள்ளது.

ADVERTISEMENT

நிலையற்ற தன்மை அதிகரிப்பு

சந்தையின் நிலையற்ற தன்மை உயர்வு மற்றும் ஹெட்ஜ் ஃபண்டுகளின் கட்டாய விற்பனை

பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஹெட்ஜ் ஃபண்டுகள் தங்களது ஆபத்தான வர்த்தக நிலைகளை அவசர அவசரமாக விற்கத் தொடங்கியுள்ளன.

இதன் காரணமாக சந்தையின் பயத்தைக் கணிக்கும் சிபோ விஐஎக்ஸ் குறியீடு 28.18 புள்ளிகளாக உயர்ந்து மார்ச் மாதத்திற்குப் பிறகான உச்சத்தைத் தொட்டுள்ளது.

மேலும் மோர்கன் ஸ்டான்லி தரவுகளின்படி 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஹெட்ஜ் ஃபண்டுகள் சந்தித்துள்ள மிகப்பெரிய மூலதன வெளியேற்றமாக இது பதிவாகியுள்ளது.

பங்குச் சந்தையில் தொடர்ந்து நிச்சயமற்ற சூழல் நிலவுவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடமாகக் கருதப்படும் அமெரிக்க அரசுப் பத்திரங்களை நோக்கித் தங்களது நிதியைத் தீவிரமாக நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT