LOADING...
அமெரிக்காவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் கடுமையாக உயர்வு; வேலையின்மை விகிதமும் அதிகரிப்பு
அமெரிக்காவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் கடுமையாக உயர்வு

அமெரிக்காவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் கடுமையாக உயர்வு; வேலையின்மை விகிதமும் அதிகரிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2025
07:31 pm

செய்தி முன்னோட்டம்

எரிபொருள், மளிகைப் பொருட்கள், பயணம் மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வு காரணமாக அமெரிக்காவில் கடந்த மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது. தொழிலாளர் துறை கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) வெளியிட்ட அறிக்கையின்படி, நுகர்வோர் விலைகள் ஆகஸ்ட் மாதத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2.9% உயர்ந்துள்ளன. இது ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக உயர்ந்த வருடாந்திர அதிகரிப்பு ஆகும். உணவு மற்றும் எரிசக்தி அல்லாத பிற பொருட்களின் பணவீக்கம் 3.1% ஆக உள்ளது. இந்த இரண்டு விகிதங்களும் அமெரிக்க மத்திய வங்கியின் 2% இலக்கை விட அதிகமாக உள்ளன. இந்த அறிக்கை, அடுத்த வாரம் நடைபெறவுள்ள மத்திய வங்கியின் முக்கியமான கொள்கைக் கூட்டத்திற்கு முன்னதாக வந்துள்ளது.

எதிர்பார்ப்பு 

வட்டி விகிதம் குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு

அந்தக் கூட்டத்தில், கொள்கை வகுப்பாளர்கள் வட்டி விகிதத்தைக் குறைப்பார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கைகள், வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைந்து வருவதையும், வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 4.3% ஆக அதிகரித்துள்ளதையும் காட்டுகின்றன. பொதுவாக, பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும்போது, செலவினங்களையும் வளர்ச்சியையும் தூண்டுவதற்காக மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும். ஆனால், பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதங்களை நிலையாக வைத்திருக்கும் அல்லது அதிகரிக்கும் முடிவை எடுக்க வேண்டும். இந்த முரண்களுக்கு மத்தியில், மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், வேலைவாய்ப்புச் சந்தை குறித்துக் கொள்கை வகுப்பாளர்கள் அதிகம் கவலைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரம் வட்டிவிகிதக் குறைப்பு எதிர்பார்க்கப்பட்டாலும், தொடர்ச்சியான பணவீக்கம், மத்திய வங்கி விரைவாக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கலாம்.