பட்ஜெட் 2026: நிதிப்பற்றாக்குறை முதல் வரிச் சலுகை வரை- நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சொற்கள்
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் உரையின் போது பயன்படுத்தப்படும் 'நிதிப்பற்றாக்குறை', 'மூலதனச் செலவு' போன்ற சொற்கள் பலருக்குக் கடினமாக தோன்றலாம். ஆனால், இந்த வார்த்தைகளுக்கு பின்னால் உங்கள் வீட்டு பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் ஒளிந்துள்ளன. பட்ஜெட்டை எளிமையாக புரிந்துகொள்ள உதவும் சில முக்கிய வார்த்தைகள் இதோ:
#1
முக்கிய வார்த்தைகள் #1
நிதிப்பற்றாக்குறை (Fiscal Deficit): அரசாங்கத்தின் மொத்த வருமானத்தை விடச் செலவு அதிகமாக இருக்கும்போது ஏற்படும் இடைவெளியே இது. இந்த இடைவெளியை நிரப்ப அரசு சந்தையில் கடன் வாங்கும். அரசின் கடன் அதிகரித்தால், அது வங்கிகளின் வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன் விளைவாக, நீங்கள் வாங்கியுள்ள வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன்களுக்கான இஎம்ஐ (EMI) அதிகரிக்கக்கூடும். மூலதனச் செலவு மற்றும் வருவாய் செலவினம்: அரசாங்கம் பாலம், சாலை, மருத்துவமனை போன்ற நீண்டகாலச் சொத்துக்களை உருவாக்கச் செய்யும் செலவு, மூலதனச் செலவு (Capex) எனப்படும். இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மாறாக, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் மானியங்களுக்குச் செய்யப்படும் செலவு வருவாய் செலவினம் ஆகும். ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு மூலதனச் செலவு அதிகமாக இருக்க வேண்டும்.
#2
முக்கிய வார்த்தைகள் #2
வருவாய்ப் பற்றாக்குறை (Revenue Deficit): அரசாங்கத்தின் அன்றாட நிர்வாக செலவுகளைச் செய்யக்கூட அதன் வரி வருவாய் போதுமானதாக இல்லாத நிலையைக் குறிக்கும். இது அரசின் நிதிநிலை பலவீனமாக இருப்பதை சுட்டிக்காட்டும். முதன்மை பற்றாக்குறை (Primary Deficit): நிதிப்பற்றாக்குறையிலிருந்து பழைய கடன்களுக்காக செலுத்தப்படும் வட்டியைத் தள்ளுபடி செய்தால் கிடைப்பது இது. புதிய திட்டங்களுக்காக அரசு எவ்வளவு கடன் வாங்குகிறது என்பதை இது துல்லியமாக காட்டும். ஜிடிபி வளர்ச்சி (Nominal GDP Growth): பணவீக்கத்தை சேர்த்து கணக்கிடப்படும் பொருளாதார வளர்ச்சி இது. நாட்டின் வரி வசூல் இலக்குகள் இந்த மதிப்பைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. இம்முறை இது 8% ஆகக் குறைய வாய்ப்புள்ளதால், அரசின் நிதிச் சுதந்திரம் சற்று நெருக்கடிக்குள்ளாகலாம்.