முகவரி மாறினாலும் பாரம்பரியம் மாறாது; பழைய இடத்திலேயே அச்சிடப்படும் பட்ஜெட் 2026 ஆவணங்கள்
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதி அமைச்சகம் தனது அலுவலகத்தை ரைசினா ஹில்லிலிருந்து (North Block) கர்த்தவ்யா பவனில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றியிருந்தாலும், 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆவணங்கள் வழக்கம் போல நார்த் பிளாக் வளாகத்திலேயே அச்சிடப்பட உள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினர் கடந்த 2025 செப்டம்பரில் புதிய அலுவலகத்திற்கு மாறினர். இருப்பினும், புதிய வளாகத்தில் பட்ஜெட் ஆவணங்களின் ரகசியத்தைப் பாதுகாக்கும் வகையிலான அதிநவீன மற்றும் பாதுகாப்பான அச்சுக்கூடம் இன்னும் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை. பட்ஜெட் ஆவணங்கள் கசிவதை தவிர்க்க, பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் நார்த் பிளாக் அடித்தளத்தில் உள்ள அச்சுக்கூடமே பாதுகாப்பானது எனக் கருதப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியம்
பட்ஜெட் காலவரிசை மற்றும் பாரம்பரியம்
ஹல்வா விழா: பட்ஜெட் அச்சிடும் பணியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நடத்தப்படும் 'ஹல்வா விழா' அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு பிறகு, பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடும் சுமார் 60 அதிகாரிகள் வெளி உலகத் தொடர்பின்றி சுமார் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். பட்ஜெட் தாக்கல்: 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். டிஜிட்டல் பட்ஜெட்: 2021-ஆம் ஆண்டு முதல் காகிதமில்லா (Paperless) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தாலும், அதிகாரப்பூர்வ மற்றும் ஆவண காப்பக தேவைகளுக்காக சில நூறு பிரதிகள் இப்போதும் அச்சிடப்படுகின்றன.