ரிசர்வ் வங்கியுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE-யின் சென்ட்ரல் வங்கி
உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று அபுதாபி சென்றடைந்தார். மோடியின் பயணத்தைத் தொடர்ந்து, அபுதாபியில் இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சென்ட்ரல் பேங்க் ஆஃப் யுஏஇ ஆகிய நிதி நிறுவனங்களுக்கிடையே, இரு நாட்டுத் தலைவர்கள் முன் நேற்று இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. இரு நாடுகளுக்குமிடையே மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு. இந்திய ரூபாய் மற்றும் யுஏஇ திர்ஹாமைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குதன் பொருட்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இத்துடன், இரு நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கட்டண சேவை முறைகளை இணைப்பது குறித்த மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது.
இருநாட்டு கட்டண சேவை முறைகளின் இணைப்பு:
இந்தியாவின் டிஜிட்டல் கட்டண சேவை முறையான யுபிஐ-ஐ, யுஏஇ-யின் கட்டண சேவை முறையான Instant Payment Plateforms-உடன் இணைப்பதன் மூலம் இருநாடுகளுக்குமிடையே தடையில்லா டிஜிட்டல் கட்டண சேவை பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், இரு நாட்டு கட்டண அட்டைகளை இணைப்பதன் மூலம் இரு நாட்டு கட்டணை அட்டகளையும், இந்தியா மற்றும் யுஏஇ ஆகிய இரண்டு நாடுகளிலும் பயன்படுத்த வழிவகை செய்யப்படவிருக்கிறது. இத்துடன், இரு நாட்டு கட்டணங்கள் சார்ந்த குறுஞ்செய்தி அமைப்புகளையும் இணைக்கவும் புதிய வழிமுறைகள் ஆராயப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாடுகளுக்குமிடையே தடையற்ற பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.