LOADING...
அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு! $300 பில்லியன் மதிப்பில் மெகா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் ரிலையன்ஸ் உதவியுடன் $300 பில்லியன் மதிப்பில் மெகா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு! $300 பில்லியன் மதிப்பில் மெகா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! டிரம்ப் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 11, 2026
08:06 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவை எரிசக்தித் துறையில் முதன்மை நாடாக்க விரும்பி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்வில் பகுதியில் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த மெகா திட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீடு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகழாரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்: டிரம்ப் புகழாரம்

தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதிவின்படி, அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன்முறையாக ஒரு புதிய சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட உள்ளது. இந்த மாபெரும் முதலீட்டிற்காக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தென் டெக்சாஸ் பகுதியில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் அமெரிக்காவை எரிசக்தி துறையில் மீண்டும் முதன்மை நாடாக மாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடி

ஈரான் போரும் எரிசக்தி நெருக்கடியும்

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ளது. உலகின் 5இல் 1 பங்கு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுபோயுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா தனது சொந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் இந்த அமெரிக்கா ஃபர்ஸ்ட் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங் ஆலை உலகின் மிகத்தூய்மையான சுத்திகரிப்பு ஆலையாக இருக்கும் என்றும், இது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement