முந்தைய முடிவை திரும்பப் பெற்ற டாடா சன்ஸ்! என்.சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் தலைவர் பதவி நீட்டிப்பு; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான டாடா சன்ஸின் நிர்வாகத் தலைவராக பணியாற்றி வரும் என்.சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கி டாடா சன்ஸ் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக தனது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை என அறிவித்திருந்த சந்திரசேகரன், தற்போது அந்த முடிவைத் திரும்பப் பெற்று மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
திடீர் மாற்றம்
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவும் டாடா சன்ஸின் திடீர் மாற்றமும்
டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிராகரித்த சில நாட்களிலேயே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2017-ல் முதல்முறையாக தலைவரான சந்திரசேகரன் 2022-ல் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரியில் முடிவடைய உள்ள நிலையில், இந்தப் புதிய விரிவாக்கம் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து வேறுபாடுகள்
டாடா டிரஸ்ட் உடனான கருத்து வேறுபாடுகளும் தற்போதைய சூழலும்
டாடா சன்ஸில் 66 சதவீதப் பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட் நிர்வாகத்துடன் குழுமத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாக முறைகள் குறித்து சில கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்பட்டது.
இதன் காரணமாகவே அவர் மீண்டும் தலைவராக விரும்பவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது இம்முடிவு மாற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த முடிவு மாற்றத்திற்கான துல்லியமான காரணங்கள் குறித்து டாடா சன்ஸ் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.