டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டிஷ் அரசின் நைட்ஹுட் விருது! இந்திய கார்ப்பரேட் உலகில் புதிய மைல்கல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், இந்தியா - பிரிட்டன் இடையிலான வணிக உறவுகளை வலுப்படுத்தியதற்காகப் பிரிட்டிஷ் அரசின் கௌரவ நைட்ஹுட் விருதைப் பெற்றுள்ளார். மார்ச் 18, புதன்கிழமை அன்று டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இவருக்கு 'Knight Commander of the Most Excellent Order of the British Empire (KBE)' எனும் பட்டம் வழங்கப்பட்டது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
பாராட்டு
பிரிட்டிஷ் தூதரின் பாராட்டு
பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ் சார்பாக, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் லிண்டி கேமரூன் இந்த விருதை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "சந்திரசேகரன் அவர்கள் பிரிட்டனின் நெருங்கிய நண்பர் மற்றும் இந்தியத் தொழில் உலகின் ஒரு ஐகான். அவரது தலைமையின்கீழ் டாடா குழுமம் பிரிட்டனில் ஆட்டோமொபைல், ஸ்டீல், தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் துறைகளில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது." என்று பாராட்டினார்.
பிரிட்டன்
பிரிட்டனில் டாடாவின் ஆதிக்கம்
பிரிட்டனில் சுமார் 70,000 பணியாளர்களைக் கொண்டு, அங்குள்ள மிகப்பெரிய இந்திய வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாக டாடா குழுமம் விளங்குகிறது. ஜாகுவார் லேண்ட் ரோவர், டெட்லி, டாடா ஸ்டீல் போன்ற 19 துணை நிறுவனங்கள் பிரிட்டனில் இயங்கி வருகின்றன. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை முழுமையான மின்சார வாகன நிறுவனமாக மாற்றுவது மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தில் அதிக முதலீடுகளைச் செய்வது டாடாவின் இலக்காகும்.
நெகிழ்ச்சி
சந்திரசேகரன் நெகிழ்ச்சி
விருதைப் பெற்றுக் கொண்ட சந்திரசேகரன் கூறுகையில், "இந்தக் கௌரவம் எனக்கு மட்டும் சொந்தமானதல்ல, டாடா குழுமத்தில் பணியாற்றும் அனைத்து சகாக்களுக்கும் உரியது. பிரிட்டனுடனான எங்களது உறவு நீண்ட கால மற்றும் உறுதியான ஒன்று. தொழில்நுட்பம் முதல் பசுமை எஃகு தயாரிப்பு வரை எங்களது முதலீடுகள் தொடரும்." என்று தெரிவித்தார்.