ரூ.2,000 கோடி முதலீடு; ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். தமிழ்நாட்டில் டிரில்லியன்ட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவை நிறுவுவதற்கும், மாநிலத்தில் அவற்றின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதரவு மையத்தை அமைப்பதற்கும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியாளர்களான நைக் நிறுவனத்துடன் அதன் தயாரிப்பு உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையத்தை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக முதல்வர் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு
ஆப்டம் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
தனது அமெரிக்க பயணத்தில், தமிழகத்தில் ஏற்கனவே 5,000 பேர் பணிபுரியும் ஆப்டம் என்ற சுகாதார சேவை நிறுவன அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழகத்தின் திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக ஆப்டம் உடனான சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் அலுவலக அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது வணிக பயணத்தின்போது சான் பிரான்சிஸ்கோவிலும், இப்போது சிகாகோவிலும் பல கார்ப்பரேட் நிறுவனங்களை சந்தித்தார். அப்போது கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமையகங்களுக்குச் சென்ற முதல்வர், தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.