தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா
தூத்துக்குடியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது அவ்வங்கி. சமீபத்தில், ஒரு வாகன ஓட்டுனரின் வங்கியில் தவறுதலாக கோடிக்கணக்கில் பணம் போடப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் சேமிப்புக் கணக்கு ஒன்றை பராமரித்து வருகிறார். அவரது கணக்கில் தவறுதலாக ரூ.9000 கோடி வரவு வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சர்ச்சைகளில் சிக்கியிருந்த நிலையில், அது தொடர்பாக எந்த விளக்கமும் அவ்வங்கி அளிக்கவில்லை. ஆனால், தற்போது அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணத்திற்காக ராஜினாமா?
தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக, தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் எஸ்.கிருஷ்ணன். இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், அவருடைய ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு, இது குறித்து ரிசர்வ் வங்கிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, கிருஷ்ணனே தலைமை செயல் அதிகாரியாகத் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டிருக்கும் வேளையில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்காகக் காத்திருக்கிறது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. 2022 செப்டம்பர் 4ல் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் சிஇஓவாக இணைவதற்கு முன்பு, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிஇஓவாகவும் பணியாற்றியிருக்கிறார் கிருஷ்ணன். மேலும், கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகிய வங்கிகளின் முக்கியப் பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார்.