மத்திய அரசின் NBCC மாடலில் புதிய பொதுத்துறை நிறுவனம்; ₹200 கோடிக்கு அதிகமான திட்டங்களுக்கு TNICC-ஐ உருவாக்கியது தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ₹200 கோடிக்கும் அதிகமான திட்ட மதிப்பீடு கொண்ட அரசு கட்டிடங்கள் மற்றும் மிகப்பெரிய உள்கட்டமைப்புப் பணிகளை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் (TNICC) என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 18, 2026 அன்று வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
புதிய கட்டமைப்பு
மத்திய அரசின் NBCC நிறுவனத்தின் மாடலில் உருவாகும் புதிய கட்டமைப்பு
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்பிசிசி (NBCC India Limited) நவரத்னா பொதுத்துறை நிறுவனத்தின் செயல்பாட்டு மாதிரியை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேகமான முடிவெடுக்கும் திறன், நவீன வர்த்தக உத்திகள் மற்றும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையுடன் உலகத்தரம் வாய்ந்த தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சாலை உள்கட்டமைப்பிற்காக டான்ஷா (TANSHA) அமைப்பு 2024-ல் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ஒப்பந்தம்
டவுன்ஷிப்புகள், ஐடி நகரங்கள் மற்றும் உலகளாவிய ஒப்பந்தப் போட்டிகள்
புதிய நிறுவனமானது அரசிற்கு சொந்தமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் காலியிடங்களில் வருவாய் ஈட்டக்கூடிய வர்த்தகக் கட்டிடங்களைக் கட்டும் பணிகளை மேற்காள்ளும்.
அத்துடன் நவீன நகரங்கள், தொழில்துறை மையங்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் தொழில் பூங்காக்களை உருவாக்கும்.
மேலும், தனியார் நிறுவனங்களால் விடப்படும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மாபெரும் கட்டிடக் கட்டுமான ஒப்பந்தப் போட்டிகளிலும் அரசு விதிமுறைகளின்படி இந்த நிறுவனம் நேரடியாகப் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்ட மேலாண்மை
திட்ட மேலாண்மை ஆலோசனைகள் மற்றும் சுயசார்பு நிதி அமைப்பு
பொதுப்பணி தலைமைப் பொறியாளரின் பரிந்துரையை ஏற்று உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், பிற அரசுத் துறைகளுக்குத் தேவையான நவீன கட்டடக்கலை வடிவமைப்பு, திட்டக் கட்டுப்பாட்டு சேவைகள் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனைகளையும் வழங்கும்.
இதன் மூலம் ஆலோசனை மற்றும் ஒப்பந்தக் கட்டணங்கள் வழியாக தற்சார்பு நிதியை ஈட்டும் திறனுமிக்க உத்திசார் அமைப்பாக புதிய நிறுவனம் இயங்கும் என்பதால், தமிழகத்தின் நீண்டகால உள்கட்டமைப்புத் தேவைகள் மிக விரைவாக நிறைவடையும் எனக் கருதப்படுகிறது.