Loading...
தமிழ்நாட்டின் புதிய BESS கொள்கை: 10 ஆண்டுகளுக்கு கட்டண விலக்கு, அமைச்சர் அறிவிப்பு
மின்கல ஆற்றல் சேமிப்புக் கொள்கை 2026 மற்றும் இணையதளத்தை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாட்டின் புதிய BESS கொள்கை: 10 ஆண்டுகளுக்கு கட்டண விலக்கு, அமைச்சர் அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Nov 04, 2026
06:21 pm

செய்தி முன்னோட்டம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான சேவைகளை வழங்கவும், தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை 2026 மற்றும் பிரத்யேக விண்ணப்ப வலைதளத்தை எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அறிமுகப்படுத்தியுள்ளார். சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்தி, உச்சகட்டத் தேவை நேரங்களில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2029-க்குள் மாநிலத்தில் 10 ஜிகாவாட் (GWh) மின்கல சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டாய நிபந்தனை

முதலீட்டாளர்களுக்கு கட்டண விலக்கு

முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தகுதியுடைய சேமிப்புத் திட்டங்கள் செயல்படத் தொடங்கும் நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு மின்கடத்தல் மற்றும் மின்பரிமாற்றக் கட்டணங்களில் நூறு சதவீத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 1 மெகாவாட் மற்றும் அதற்கு மேல் நிறுவுதிறன் கொண்ட புதிய சூரிய மின் திட்டங்களில், குறைந்தபட்சம் 10 சதவீத மின்கல சேமிப்புத் திறனை நான்கு மணி நேர மின்சார வெளியீட்டுத் திறனுடன் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயங்கும் சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களிலும் கூடுதல் அனுமதியின்றி இத்தகைய மின்கல அமைப்புகளை நிறுவலாம்.

ஒற்றைச்சாளர முறை

இணையவழி அனுமதி

மின் திட்டங்களுக்கான அனுமதி முறையை எளிதாக்கும் வகையில் nces.tngecl.org என்ற ஒற்றைச்சாளர இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

திட்டமுனைவோர் பதிவு செய்தல், ஆவணங்களைச் சமர்ப்பித்தல், கட்டணம் செலுத்துதல், தொழில்நுட்ப ஆய்வு மற்றும் மின்கட்டமைப்பு இணைப்பு அனுமதி பெறுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இதன் வழியே மின்னணு முறையில் செயல்படுத்தப்படும்.

விண்ணப்ப நிலையை இணையம் மற்றும் மின்னஞ்சல் மூலம் அறியும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்புகள் தமிழகத்தின் எரிசக்திப் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT