ஸ்விக்கி நிறுவனத்தின் ரூ.33 கோடி மோசடி; இளநிலை ஊழியர் மீது வழக்கு பதிவு
பெங்களூரைச் சேர்ந்த உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, ஒரு முன்னாள் ஜூனியர் ஊழியர் நிறுவனத்தில் ரூ.33 கோடியை மோசடி செய்ததாக தெரிவித்துள்ளது. நிறுவனம் தனது 2023-24 நிதியாண்டிற்கான வருடாந்திர அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐபிஓவுக்கு உட்பட்ட சமயத்தில் ஸ்விக்கி இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு வெளிப்புற குழுவை நியமித்ததாகவும், முன்னாள் ஊழியர் மீது சட்டப்பூர்வ புகார் அளித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. இதுதொடர்பான அறிக்கையில், "விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளின் மதிப்பாய்வின் அடிப்படையில், மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த ஆண்டில் மேற்கூறிய தொகைக்கான செலவை குழு பதிவு செய்துள்ளது" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் ஐபிஓ தாக்கல்
ஸ்விக்கி நிறுவனம் அதன் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) வரைவு ஆவணங்களை ரகசிய வழி மூலம் ஏப்ரல் 26 அன்று தாக்கல் செய்தது. அதன் ஆண்டறிக்கையின்படி, உணவு விநியோக நிறுவனம் 36 சதவீதம் வருவாய் அதிகரித்து, நிதியாண்டில் ரூ.11,247 கோடியை எட்டியது. செலவினங்களைக் குறைப்பதன் மூலம் அதன் இழப்பை 44 சதவீதம் குறைத்து ரூ.4,179 கோடியிலிருந்து ரூ.2,350 கோடியாகக் குறைக்க முடிந்தது. நிதியாண்டு 2023-24இல் நிறுவனத்தின் மொத்தச் செலவு ரூ.13,947 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் குறைந்துள்ளது. முதன்மையாக ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டது. இது நிதியாண்டு 2022-23இல் ரூ.2,501 கோடியிலிருந்து 2023-24இல் ரூ.1,851 கோடியாகக் குறைந்தது.