ஸ்விக்கி, ப்ளிங்கிட் நிறுவனங்களுக்கு ஷாக்! 'எங்களுக்கு 10 நிமிஷத்துல சாப்பாடு வேணாம்'; இந்தியர்களின் அதிரடி பதில்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ப்ளிங்கிட் மற்றும் ஜெப்டோ போன்ற நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு 10 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன. ஆனால், இந்திய நுகர்வோர் உண்மையில் எதை விரும்புகிறார்கள் என்பது குறித்து லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான இந்தியர்கள் 10 நிமிடங்களில் தின்பண்டங்கள் டெலிவரி செய்யப்படுவதை விட, மற்ற சில சேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
தேவை
மருந்துகளுக்குத்தான் வேகம் தேவை
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர், "பத்து நிமிடங்களில் சிப்ஸ் அல்லது குளிர்பானங்கள் டெலிவரி செய்யப்படுவது பெரிய விஷயம் அல்ல. ஆனால் அவசர காலங்களில் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் விரைவாகக் கிடைப்பதே முக்கியம்" என்று தெரிவித்துள்ளனர். ஒரு நோயாளிக்கு மருந்து தேவைப்படும்போது அல்லது அவசரத் தேவை ஏற்படும்போது இந்த 10 நிமிட டெலிவரி சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள்
மற்ற அத்தியாவசியப் பொருட்களின் தேவை
மருந்துகளைத் தொடர்ந்து, தினசரித் தேவையான பால், முட்டை மற்றும் காய்கறிகள் போன்ற அழுகும் பொருட்களும் விரைவாக டெலிவரி செய்யப்பட வேண்டும் என்று நுகர்வோர் விரும்புகின்றனர். தேவையற்ற தின்பண்டங்களுக்காக டெலிவரி ஊழியர்கள் சாலைகளில் அதிவேகமாகச் சென்று தங்களது உயிரைப் பணயம் வைப்பதை மக்கள் ஆதரிக்கவில்லை. மாறாக, உண்மையான தேவை உள்ள பொருட்களுக்கு மட்டும் இந்த வேகத்தைப் பயன்படுத்தலாம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
பாதுகாப்பு
டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு
விரைவு டெலிவரி நிறுவனங்கள் வழங்கும் இந்த 10 நிமிட சேவை, டெலிவரி ஊழியர்களுக்கு அதிக மன அழுத்தத்தையும், சாலை விபத்துகளையும் ஏற்படுத்துவதாகச் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவுகளும் அதையே பிரதிபலிக்கின்றன. "தேவையில்லாத பொருட்களுக்கு இவ்வளவு வேகம் தேவையில்லை, இது ஊழியர்களின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது" என்று பல நுகர்வோர் கவலை தெரிவித்துள்ளனர். நிறுவனங்கள் தங்களது டெலிவரி வேகத்தை விட, பொருட்களின் தரம் மற்றும் சேவையின் நம்பகத்தன்மையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.