சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன?
இந்தியா: சஹாரா குழுமத்தின் உரிமையாளர் சுப்ரதா ராய் நேற்று மரணமடைந்த நிலையில், 3 கோடி மக்களிடம் மோசடி செய்யப்பட்ட 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுப்ரதா ராய்(75) கார்டியோஸ்பிரேட்டரி அடைப்பு காரணமாக நேற்று இரவு 10.30 மணியளவில் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் காலமானார். சிட்-பண்ட்டுகள் மூலம் மக்களிடமிருந்து எந்த பணத்தையும் பெறக்கூடாது என்று சஹாரா இந்தியா பைனான்சியல் கார்ப்பரேஷன் லிமிடெட்(SIFCL) நிறுவனத்திற்கு 2008ஆம் ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது. ஆனால், அந்த தடையையும் மீறி SIFCL மக்களிடம் இருந்து பணத்தை பெற்றது. இதனால், 2015ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது
15% வட்டியுடன் மோசடி செய்த பணத்தை திருப்பி வழங்க உத்தரவு
மேலும், அந்த நிறுவனம் மக்களிடம் பெற்ற பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், 2008 முதல் 2011 வரை, சஹாரா குழுமத்தை சேர்ந்த சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன்(SIREC) மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்(SHIC) ஆகிய இரண்டு நிறுவனங்களும் 3 கோடி மக்களிடம் இருந்து 17,656 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கணக்கு வைக்காமல் தனிப்பட்ட முறையில் பெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருடத்திற்கு 15% வட்டியுடன் மக்களிடம் பெற்ற பணம் திருப்பி செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், 95 சதவீதத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டதாக சஹாரா குழுமம் கூறியது.
பணத்தை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்?
எனினும், முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி செலுத்துவதற்காக, ரூ.24,000 கோடியை SEBIயிடம்(மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளர்) டெபாசிட் செய்யும்படி சஹாரா குழுமத்திடம் கேட்கப்பட்டது. இந்த பிரச்சனையில் பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு 11 ஆண்டுகளில் 138.07 கோடி ரூபாயை SEBI திருப்பி அளித்துள்ளது. இதற்கிடையில், பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக சிறப்பாக திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.25,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மார்ச் 31, 2023 நிலவரப்படி, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகை சுமார் ரூ.25,163 கோடி ஆகும் என்று SEBI தெரிவித்துள்ளது. சஹாராவின் 4 நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மத்திய அரசின் CRCS Sahara portal மூலம் விண்ணப்பித்து தங்களது பணத்தை வட்டியுடன் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.