கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள்
கடந்த மே 19, ரிசர்வ் வங்கி, ₹2,000 மதிப்புள்ள வங்கி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தற்போது வரை புழக்கத்தில் இருந்த ₹2,000 ரூபாய் நோட்டுகளில், 97%-க்கும் அதிகமானவை திரும்பி வந்துவிட்டன என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2016 நவம்பரில், அப்போது நடைமுறையில் இருந்த ₹1,000 மற்றும் ₹500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ₹2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுகள் தான் தற்போது திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அக்டோபர் 7 என காலக்கெடுவும் விதிக்கப்பட்ட நேரத்தில், நாட்டு மக்கள் அநேகம் பேர் தங்கள் வசம் இருந்த ₹ 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி இருந்தாலும், இன்னும் சிலர் மாற்றாமல் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
₹ 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த சில வழிகள்
இப்படி மாற்றாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்காகவே, ரிசர்வ் வங்கி சில வழிகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மக்கள் தங்களின் ₹2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட பிராந்திய அலுவலகங்களுக்கு, காப்பீடு செய்த தபால் மூலம், நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாம். மேலும், ரிசர்வ் வங்கி மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் ₹ 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு TLR (டிரிபிள் லாக் ரெசிப்டக்கிள்) படிவத்தை வழங்குகிறது. இந்த இரு நெறிமுறைகளும் பாதுகாப்பானவை என ஆர்பிஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களில் மாற்றி கொள்ளலாம்
அக்டோபர் 8 முதல், ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில், தனிநபர்கள், தங்கள் வசமுள்ள ₹ 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அதற்கு சமமான தொகையை, அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அகமதாபாத், பெங்களூர், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள், ₹ 2,000 நோட்டுகளை மாற்றுகின்றன/ டெபாசிட் செய்ய உதவுகின்றன.