அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதன் அவசியத்தை குறிப்பிடும் ஆய்வறிக்கை
உலகளவில் அலுவலகத்திற்கு தேவையான பொருட்களை வடிவமைத்து தயாரித்து வரும் வணிக நிறுவனமான ஸ்டீல்கேஸ், புதிய ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டிருக்கிறது. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் காலாச்சாரம் பெருகி வரும் நிலையில், அலுவலகத்தில் இருந்து வேலை பார்ப்பதன் முக்கியத்துவம் குறித்து புதிய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்த அறிக்கைக்காக, 11 நாடுகளைச் சேர்ந்த 4,986 பேரிடம் கணெக்கெடுப்பை நடத்தியிருக்கிறது ஸ்டீல்கேஸ் நிறுவனம். இந்த அறிக்கையில் பணியாளர்கள் எந்த விதமான வேலை செய்யுமிடத்தை விரும்புகிறார்கள், எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், என்பது குறித்த தகவல்களையும் கணெக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களிடமிருந்து பெற்றிருக்கிறது அந்நிறுவனம்.
ஸ்டீல்கேஸ் நிறுவனத்தின் அறிக்கை:
வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை விட, அலுவலகத்தில் இருந்து வேலை பார்ப்பவர்கள் 33% அதிக ஆர்வத்துடனும், 30% நிறுவனத்துடன் இணைந்தும் மற்றும் 20% கூடுதல் திறனுடனும் வேலை பார்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது ஸ்டீல்கேஸ் நிறுவனம். இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் 87% பேர் அலுவலகத்தில் இருந்தே வேலை பார்க்கிறார்கள், எனினும் அவர்களில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வேலை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்றவர்களில், 55% பேர் கூடுதல் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நாட்களை விட, அலுவலகத்தில் தங்களுக்கென தனி இடம் கொடுத்தால், அதனையே தேர்ந்தெடுப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது தங்களுக்கென தனி இடம் இருப்பது சிறந்த அனுபவமாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.