ஸ்டார்பக்ஸூக்கு எதிராக எழும் முழக்கங்கள்; ஊழியர்களுக்கு சிஇஓ கடிதம்
உலகளவில் மிகவும் புகழ்பெற்ற காஃபி வணிக சங்கிலி நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்பக்ஸூக்கு (Starbucks) அக்டோபர் முதலான நடப்பு காலாண்டு மிகவும் சவாலான ஒரு காலாண்டாகவே இருந்து வருகிறது. இதற்கு முந்தைய காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் விற்பனையை மேற்கொண்டதோடு, சீனாவிலும் ஸ்டார்பக்ஸ் குறிப்பிட்ட அளவில் வளர்ச்சி கண்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தது அந்நிறுவனம். ஆனால், அக்டோபர் மாதத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பிற்கு இடையே ஏற்பட்ட போர், அது குறித்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்களின் கருத்து ஆகியவற்றின் காரணமாக அந்நிறுவனத்தின் விற்பனை மட்டுமின்றி நற்பெயரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.
ஸ்டார்பக்ஸ் ஊழியர்களின் கருத்தும் ஸ்டார்பக்ஸூம்:
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தொடர்பாக பாலஸ்தீனுக்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியர்களின் கூட்டமைப்பு எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களைப் பதிவிட தீவிரவாதத்திற்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ஆதரவாக இருப்பதாக இஸ்ரேல் ஆதரவாளர்கள் ஸ்டார்பக்ஸூக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தும் போது, ஸ்டார்பக்ஸின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டாம் என ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது ஸ்டார்பக்ஸ். இதனால், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸ் செயல்படுவதாகக் கூறி பாலஸ்தீன் ஆதராவாளர்கள் ஸ்டார்பக்ஸூக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு பக்க ஆதரவாளர்களிடமிருந்து பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது அந்நிறுவனம்.
ஸ்டார்பக்ஸ் சிஇஓ-வின் கடிதம்:
கடந்த ஆண்டில் அதிகபட்ச விற்பனையை ஸ்டார்பக்ஸ் செய்திருந்தாலும், இந்த காலாண்டில் அதன் விற்பனை கடும் சரிவைச் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த JP மோர்கன் ஆய்வு நிறுவனம். இந்த பிரச்சினைகளுக்கிடையில் தங்களுடைய நிறுவன ஊழியர்களுக்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ லக்ஷ்மன் நரசிம்மன். அந்தக் கடிதத்தில், "நாம் வாழும் உலகம் குறித்த கவலை எனக்கு அதிகமாகவே இருக்கிறது. உலகின் பல இடங்களில் பல்வேறு பிரச்சினைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறை, தீவிரவாதம் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் கட்டவிழ்க்கப்படுகின்றன. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சூழ்நிலையில் நாம் நிற்பது மனிதத்தின் பக்கம் மட்டுமே" எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.