நடப்பு நிதியாண்டில் மூன்றாம் முறையாக தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி
செய்தி முன்னோட்டம்
2023-24 நிதியாண்டிற்கான III சீரிஸ் தங்கக் கடன் பத்திரத்தை (Sovereign Gold Bond) வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. டிசம்பர் 18ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை இந்தத் தங்கக் கடன் பத்திரங்களுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிப்பவர்களுக்கு டிசம்பர் 28ம் தேதி தங்கக் கடன் பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்த 2023ம் ஆண்டு மட்டும் 13% வரை தங்க விலை உயர்ந்திருக்கிறது.
பிற பயன்பாடுகளுக்காக இன்றி, வெறும் முதலீட்டுக்காக மட்டும் தங்கம் வாங்கும் முதலீட்டாளர்கள், அரசு ஆதரவு பெற்ற இந்தத் தங்கக் கடன் பத்திரங்களைப் பரிசீலனை செய்யலாம்.
தங்கம்
தங்கக் கடன் பத்திரத்திற்கான விலை:
இன்றைக்கு 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூ.6,311 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தங்கக் கடன் பத்திர திட்டத்தின் கீழ் கிராமை ரூ.6,199 விலையில் வாங்க முடியும் (தங்கமாக அல்ல கடன் பத்திரமாக).
இணைய வசதி முலம் பணம் செலுத்துபவர்களுக்கு கூடுதலாக கிராமுக்கு ரூ.50 சலுகையும் வழங்கப்படுகிறது.
தங்க விலை உயர்வினால் கிடைக்கும் லாபத்தைத் தவிர்த்து, வருடத்திற்கு 2.50% வட்டியும் இந்த தங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராமில் இருந்து, அதிகபட்சம் 4 கிலோ வரையிலான மதிப்பிற்கு தங்கக் கடன் பத்திரங்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு
தங்கக் கடன் பத்திரத்தை தங்கமாக மாற்ற முடியுமா:
எட்டு ஆண்டு முதிர்வு காலத்துடன் வழங்கப்படும் தங்கக் கடன் பத்திரத்தை எக்காரணத்தைக் கொண்டு தங்கமாக மாற்ற இயலாது.
எட்டு ஆண்டு முதிர்வு காலத்திற்கு முன்பு, வாங்கியதில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டுக் கொள்ள முடியும். மேலும், இடையில் பணத்தேவை இருந்தால் இரண்டாம் நிலை சந்தைகளிலும் நம்முடைய தங்கப் பத்திரங்களை விற்பனை செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இதுதவிர, சாதாரண தங்கத்தைப் போலவே, இந்தத் தங்கக் கடன் பத்திரங்களையும் அடமானம் வைத்தும் நம்மால் பணம் திரட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கக் கடன் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர வட்டியானது, ஒரு நபரின் ஒட்டுமொத்த வருவாயுடன் சேர்க்கப்பட்டு, அதன் பிறகு உரிய வரி கணக்கிடப்படும்.