இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சி: 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்; முக்கிய காரணங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
இன்று (பிப்ரவரி 19) இந்தியப் பங்குச் சந்தையில் கரடியின் பிடி வலுவாக இருந்தது. வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,236 புள்ளிகள் சரிந்து 82,498 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 365 புள்ளிகள் சரிந்து 25,454 ஆகவும் நிலைபெற்றன. ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்ததால், முதலீட்டாளர்களுக்குச் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணங்கள்
சர்வதேசப் பதற்றமும் கச்சா எண்ணெய் விலையேற்றமும்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் உலகளாவிய சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு விமானங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை (NOTAM) மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்துத் தடை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற கவலையால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர்.
லாபம்
லாபப் பதிவு
கடந்த சில நாட்களாகச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தைச் சந்தித்து வந்த நிலையில், இன்று முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை உறுதி செய்வதற்காகப் பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கினர். குறிப்பாக வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் எரிசக்தித் துறை பங்குகளில் அதிகப்படியான விற்பனை காணப்பட்டது. ஒருகட்டத்தில் விற்பனை அழுத்தம் அதிகரித்ததால், சந்தை மீள முடியாத அளவுக்குச் சரிவைச் சந்தித்தது.
ஆசியச் சந்தை
ஆசியச் சந்தை விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை
இன்று ஆசியாவின் முக்கிய சந்தைகளான ஹாங்காங் மற்றும் சீனா போன்ற நாடுகளில் லூனார் புத்தாண்டு விடுமுறை என்பதால், அந்நிய நாட்டு முதலீட்டாளர்களின் பங்கேற்பு மிகக் குறைவாக இருந்தது. மேலும், இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பணப்புழக்கம் மற்றும் செட்டில்மென்ட் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மந்தநிலையும் சந்தைச் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.