பங்குச் சந்தையில் மீண்டும் காளைகளின் ஆதிக்கம்; சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு; 3 முக்கியக் காரணங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்திய பங்குச் சந்தைகளில் திங்கட்கிழமை (நவம்பர் 2) வர்த்தகம் மிகப்பெரிய ஏற்றத்துடன் தொடங்கி முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே பிஎஸ்இ சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 75,460 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாகக் குறைந்தது இத்தகைய உடனடி உயர்விற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. கடந்த வாரம் பேரலுக்கு $118 ஆக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய், தற்போது 3 சதவீதம் சரிந்து $110 என்ற நிலைக்கு வந்து இந்திய சந்தைக்குப் பலம் சேர்த்துள்ளது.
ஆதகமான சூழல்
உலகளாவிய ஏஐ பங்குகள் சரிவும் இந்தியாவின் சாதகமான சூழலும்
அமெரிக்க பங்குச் சந்தையில் ஏஐ தொழில்நுட்பப் பங்குகளின் அதிகப்படியான மதிப்பீடு காரணமாக நாஸ்டாக் குறியீடு 2.8 சதவீதம் வரை சரிவைக் கண்டது.
இதன் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை ஏஐ தொழில்நுட்பப் பங்குகளிலிருந்து திரும்பப் பெற்று, இந்தியா போன்ற விரிவான சந்தைகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
வங்கியியல், வாகனம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் வலிமையாக விளங்கும் இந்திய சந்தை, சர்வதேச முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மாற்று முதலீட்டு இடமாகத் திகழ்கிறது.
ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு லாப வளர்ச்சி
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது செப்டம்பர் காலாண்டில் 40.6% நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்து சந்தையின் எதிர்பார்ப்புகளை முறியடித்துள்ளது.
இதன் காரணமாக ரிலையன்ஸ் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 4 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன.
மேலும், புதிதாக பங்குச் சந்தையில் களமிறங்கிய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனமும் 13.7% லாப வளர்ச்சியைப் பதிவு செய்து சந்தையின் வளர்ச்சிப் போக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
வரி தளர்வு
வெளிநாட்டு முதலீடுகள் வருகை மற்றும் வரி தளர்வு எதிர்பார்ப்பு
உள்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சாதனை மற்றும் கடன் வளர்ச்சி ஆகிய நேர்மறையான அம்சங்கள் இந்திய பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ₹3,600 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் நீண்டகால மூலதன ஆதாய வரியில் முக்கியத் தளர்வுகள் அல்லது விலக்கு அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இன்றைய பங்குச் சந்தை மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.