LOADING...
SEBI ஊழியர்களுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை; பின்னணி என்ன?
SEBI ஊழியர்களுக்கு WFH சலுகை அறிமுகப்படுத்தியுள்ளது

SEBI ஊழியர்களுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை; பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2026
04:04 pm

செய்தி முன்னோட்டம்

ஈரான் போர் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி(SEBI), தனது இளநிலை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் WFH வாய்ப்பை தற்காலிகமாக அறிமுகப்படுத்தியுள்ளது. எரிசக்தியைச் சேமிக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி பற்றாக்குறையை சமாளிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சலுகைகள்

செபியின் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகள்

பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு அழைப்புக்கு ஆதரவாக செபி இந்த தற்காலிகக் கொள்கையை வகுத்துள்ளது. செபியின் கிரேடு ஏ முதல் பிற இளநிலை நிலை ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிசக்தி நுகர்வைக் குறைக்கும் நோக்கில், செபி தனது உள்நாட்டு நிறுவன நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க ஆலோசித்து வருகிறது. அத்தியாவசியமற்ற அலுவல் பூர்வப் பயணங்கள் மற்றும் ஹோட்டல் தங்குமிடம் போன்றவற்றுக்கான செலவினங்களை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹைப்ரிட் மாடல்

வங்கித் துறையில் பரவும் ஹைப்ரிட் மாடல்

செபிக்கு முன்னதாகவே இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி, தனது குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வொர்க் ஃபிரம் ஹோம் முறையை அனுமதித்துள்ளது. குறிப்பாக கருவூல செயல்பாடுகள், கடன் ஒப்புதல், அபாய மேலாண்மை, டிஜிட்டல் பேங்கிங் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவுகளில் உள்ள ஊழியர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனமும் இந்த ஹைப்ரிட் பணி முறைக்கு மாறியுள்ளது. ஈரான் போரால் எழுந்துள்ள உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள, இந்தியாவின் பெருநிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் மீண்டும் கோவிட் காலத்துப் பணி முறைகளைக் கையில் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement