ரிலையன்ஸ் நிதி நிறுவன மோசடியில் அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்; செபி உத்தரவு
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் தொடர்பான ஒரு வழக்கில் கார்ப்பரேட் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானிக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்தது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை இடர் அதிகாரி கிருஷ்ணன் கோபாலகிருஷ்ணனுக்கும் செபி ரூ.15 லட்சம் அபராதம் விதித்தது. அன்மோல் அம்பானி மற்றும் கிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்களுக்கான அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்துமாறு செபியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அனில் அம்பானி மற்றும் 24 பேர் பங்குச் சந்தையை ஐந்தாண்டுகளுக்கு அணுகுவதைத் தடை செய்த ஆகஸ்ட் மாத செபியின் முந்தைய உத்தரவின் தொடர் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
அனில் அம்பானி வழக்கின் பின்னணி
இந்த வழக்கு ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து நிதியை திசை திருப்பியது தொடர்பான பெரிய விசாரணையின் ஒரு பகுதியாகும். கடந்த ஆகஸ்ட் மாத உத்தரவில் அனில் அம்பானிக்கும் ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சமீபத்திய கண்டுபிடிப்புகளில், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் குழுவில் பணியாற்றிய அன்மோல் அம்பானி, பொது-நோக்கு கார்ப்பரேட் கடன்கள் (ஜிபிசிஎல்) என்று பெயரிடப்பட்ட கடன்களுக்கு ஒப்புதல் அளித்தார். அத்தகைய கடன் அனுமதிகளை நிறுத்துமாறு நிறுவனத்தின் குழுவின் தெளிவான உத்தரவு இருந்தபோதிலும் அவர் அதைச் செய்துள்ளார். செபியின் விசாரணையில், பிப்ரவரி 14, 2019 அன்று, அன்மோல் அம்பானி அக்யூரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.20 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்தது தெரியவந்தது.