தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வியாழன் (ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வரும் வகையில், தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மூன்று வருட காலத்திற்கான எஸ்பிஐயின் நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (MCLR) இப்போது 9.10% ஆக உயர்ந்துள்ளது. இது முன்பு 9% ஆக இருந்தது. ஓவர்நைட் MCLR முன்பு 8.10 ஆக இருந்த நிலையில், இப்போது 8.20% ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 2024 முதல் சில தவணைக்காலங்களில் வங்கி அதன் MCLR'ஐ 30 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.
நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (எம்சிஎல்ஆர்) மார்ஜினல் காஸ்ட் என்றால் என்ன?
MCLR என்பது, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதிக்கும் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தவிர, ஒரு வங்கி கடன் கொடுக்கக்கூடிய முழுமையான குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். ஒரு வங்கி அதற்குக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கொடுக்க முடியாது. ஆர்பிஐ ஏப்ரல் 2016'இல் MCLR'ஐ அறிமுகப்படுத்தியது. கடன் விகிதங்களை தரப்படுத்துவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அடிப்படை விகித முறையை இது மாற்றியது. எஸ்பிஐ வங்கியைப் போலவே, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி மற்றும் யூகோ வங்கி உள்ளிட்ட பிற பொதுத்துறை வங்கிகளும் தங்கள் MCLR'ஐ அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.