உலகின் தலைசிறந்த ஸ்டார்ட்அப் நகரங்கள் பட்டியலில் சான் பிரான்சிஸ்கோ முதலிடம்! இந்திய நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறதா?
செய்தி முன்னோட்டம்
இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட, அந்த நாட்டில் உள்ள தனிப்பட்ட நகரங்களின் வளர்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது. மல்டிபாலிடன் (Multipolitan) நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்டார்ட்அப் ஃப்ரண்ட்லி சிட்டி இன்டெக்ஸ் (Startup Friendly City Index) பட்டியலில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் உலகின் மிகச்சிறந்த ஸ்டார்ட்அப் நகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதலீடுகள், திறமையான மனிதவளம் மற்றும் புதிய யோசனைகளை ஈர்ப்பதில் இந்த நகரம் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது.
முதலிடம்
சான் பிரான்சிஸ்கோ முதலிடம் பிடிக்கக் காரணம் என்ன?
சிலிக்கான் வேலி போன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையங்களைக் கொண்டுள்ள சான் பிரான்சிஸ்கோ, பல தசாப்தங்களாகப் புத்தாக்கத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தேவையான துணிகர மூலதனம் (Venture Capital) இங்கு மிக எளிதாகக் கிடைக்கிறது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் நிபுணர்களின் சங்கமமாக இந்நகரம் உள்ளது. வெறும் வர்த்தகம் மட்டுமின்றி, கலை, பண்பாடு மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் கோல்டன் கேட் பாலம் போன்ற அம்சங்கள் உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கின்றன.
தேவை
ஒரு சிறந்த ஸ்டார்ட்அப் நகரத்திற்குத் தேவையானவை
மல்டிபாலிடன் குறியீட்டின் படி, ஒரு நகரம் ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கு ஏற்றதாக மாறப் பின்வரும் காரணிகள் அவசியமாகின்றன: நிதி ஆதாரம்: முதலீட்டாளர்களை எளிதில் அணுகும் வசதி. ஆதரவான கொள்கைகள்: புதிய நிறுவனங்களைத் தொடங்க உதவும் நெகிழ்வான அரசு விதிமுறைகள். டிஜிட்டல் கட்டமைப்பு: அதிவேக இணையம் மற்றும் நவீனத் தொழில்நுட்ப வசதிகள். தோல்விகளை ஏற்கும் கலாச்சாரம்: புதிய முயற்சிகளில் ஏற்படும் இடர்களைப் புரிந்து கொண்டு, மீண்டும் முயலும் மனப்பான்மை கொண்ட சமூகம்.
வளர்ச்சி
நகரங்களின் வளர்ச்சி ஏன் முக்கியம்?
ஸ்டார்ட்அப்கள் அதிகம் உள்ள நகரங்களில் வேலைவாய்ப்புகள் பெருகுவதோடு, அந்தப் பகுதியே நவீனமடைகிறது. கோ-வொர்க்கிங் ஸ்பேஸ்கள் (Co-working spaces), புதிய உணவகங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் உருவாகி, அந்த நகரத்தின் முகவரியையே மாற்றியமைக்கின்றன. சான் பிரான்சிஸ்கோவைப் பின்பற்றி லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் போன்ற நகரங்களும் இப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
இந்தியா
இந்தியாவின் பெங்களூர் பட்டியலில் 25வது இடம்
மல்டிபாலிடன் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், இந்தியாவைப் பொறுத்தவரை பெங்களூர் நகரம் 25வது இடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூரில் சிங்கப்பூரை விட இரண்டு மடங்கு யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் ஸ்டார்ட்அப் நட்பு நகரங்கள் குறியீட்டில் சிங்கப்பூர் 4வது இடத்த்தில் உள்ளது. இதற்கு காரணம் மெதுவான நிறுவன பதிவு செயல்முறைகள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த வாழ்க்கைத் தர மதிப்பெண்கள் ஆகும். இருப்பினும், நகரத்தின் தொழில்முனைவோர் ஆற்றல் மறுக்க முடியாதது. பெங்களூர் வணிக அமைப்பை நெறிப்படுத்தவும், வரி சிக்கலைக் குறைக்கவும், வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யவும் முடிந்தால், அது உலகின் முதல் 10 ஸ்டார்ட்அப் நட்பு நகரங்களில் இடம்பிடிக்க முடியும் என்று மல்டிபாலிடன் கணித்துள்ளது.