ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு
அமெரிக்காவின் ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 92 வயதான ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிபிசி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அவரது மகன் லாச்லான் முர்டோக் இரண்டு நிறுவனங்களின் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லாச்லான் ஏற்கனவே ஃபாக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. தனது பதவி விலகல் குறித்து ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு குறிப்பில், ''இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைவராக வரக்கூடிய ஒரு உணர்ச்சிமிக்க, கொள்கை ரீதியான தலைவர் நம்மிடம் இருப்பதை அறிந்து, நான் விலக இது சரியான தருணம் என நினைப்பதாக ரூபர்ட் முர்டோக் தெரிவித்துள்ளார்.
ரூபர்ட் முர்டோக் ஊடக தொழில் பின்னணி
ரூபர்ட் முர்டோக் 1996 இல் ஃபாக்ஸ் நியூஸை சிஎன்என் நிறுவனத்திற்கு போட்டியாகத் தொடங்கி, இறுதியில் அமெரிக்காவில் நம்பர் ஒன் கேபிள் செய்தி சேனலாக ஆக்கினார். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, முர்டோக்கின் சொத்து சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் என்று நம்பப்படுகிறது. தனது ஊடக சாம்ராஜ்யத்தில் ஃபாக்ஸ் நியூஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி நியூயார்க் போஸ்ட் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற ஊடக நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ளார். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை தனது மூன்று திருமணங்களில் இருந்து ஆறு குழந்தைகளை கொண்டுள்ளார். தந்தையின் ஓய்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லாச்லான் முர்டோக், அனைவரின் சார்பாகவும் தந்தையின் குறிப்பிடத்தக்க 70 ஆண்டுகால தொழில் வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.