வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
மத்திய நேரடி வரிகள் வாரியம் 2024-25 நிதியாண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்த காலக்கெடு முதலில் செப்டம்பர் 30 ஆக இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்ள சிக்கல்கள் காரணமாக வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31, 2024க்குள் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற மதிப்பீட்டாளர்கள் உட்பட பலதரப்பட்ட வரி செலுத்துவோர் இந்த நீட்டிப்பு மூலம் பயனடைவார்கள். அசல் செப்டம்பர் காலக்கெடுவிற்குள் தங்கள் வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்யாதவர்கள் இப்போது இந்த கூடுதல் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இ-ஃபைலிங் போர்ட்டலில் சிக்கல்
பல வரி செலுத்துவோர் இ-ஃபைலிங் போர்ட்டலை பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, படிவம் 10பி மற்றும் படிவம் 10பிபி போன்ற தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த தொழில்நுட்ப சிக்கல்களை ஒப்புக் கொண்டது மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 119வது பிரிவின் கீழ் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சமர்ப்பிப்பு தேதியை நீட்டிப்பதாக அறிவித்தது. இந்த நீட்டிப்பு உடனடி அழுத்தத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வருமான வரி ரிட்டன் (ஐடிஆர்) காலக்கெடுவை நவம்பர் 7, 2024 வரை நீட்டிக்கப்படலாம் என்ற நம்பிக்கையை சில வரி செலுத்துவோர் மத்தியில் எழுப்புகிறது.