வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! "பேட்டரி உற்பத்தித் திட்டம் நிக்கல.. வேகமா நடக்குது"; ரிலையன்ஸ் நிறுவனம் தகவல்
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது பேட்டரி உற்பத்தித் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக வெளியான தகவல்களை அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பேட்டரி செல்கள் தயாரிப்பு முதல் சேமிப்பு கொள்கலன்கள் வரை அனைத்துத் திட்டங்களும் திட்டமிட்டபடி சரியாக நடைபெற்று வருவதாக ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் திங்கட்கிழமை (ஜனவரி 12) தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த ஜியாமென் ஹித்தியம் எனர்ஜி ஸ்டோரேஜ் டெக்னாலஜி என்ற நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பேசி வந்த தொழில்நுட்ப ஒப்பந்தம் தோல்வியடைந்ததாகவும், இதனால் லித்தியம்-அயன் செல்கள் தயாரிக்கும் திட்டத்தை ரிலையன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது. சீன அரசின் கட்டுப்பாடுகளால் தொழில்நுட்பப் பகிர்வு சிக்கலாகிவிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதற்குப் பதிலடியாகவே ரிலையன்ஸ் தற்போது விளக்கமளித்துள்ளது.
ஜாம்நகர்
ஜாம்நகர் ஜிகா ஃபேக்டரி
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள திருபாய் அம்பானி பசுமை எரிசக்தி வளாகத்தில் பிரம்மாண்டமான பேட்டரி தொழிற்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. 2026க்குள் இந்தப் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கும் என்று முகேஷ் அம்பானி ஏற்கனவே தெரிவித்திருந்தார். 30 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்தத் தொழிற்சாலை, இந்தியாவின் பசுமை எரிசக்தித் தேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் வெறும் லித்தியம்-அயன் பேட்டரிகள் மட்டுமல்லாமல், சோடியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பத்தையும் வணிகமயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக ஃபராடியன் மற்றும் லித்தியம் வெர்க்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை ரிலையன்ஸ் ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது. வரும் காலங்களில், பெட்ரோலிய வணிகத்திலிருந்து விலகி, சுத்தமான எரிசக்தி துறையில் உலக அளவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க ரிலையன்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.