LOADING...
இனி வெள்ளியையும் கடனாக பெறலாம்; ஆர்பிஐ புதிய விதிகளில் கூறப்பட்டவை என்ன?
தங்கம் வெள்ளி கடன் பெறுவதற்கான ஆர்பிஐயின் புதிய விதிகள்

இனி வெள்ளியையும் கடனாக பெறலாம்; ஆர்பிஐ புதிய விதிகளில் கூறப்பட்டவை என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2025
12:45 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கம் மற்றும் வெள்ளியைப் பிணையாக வைத்து, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் வழங்குவதற்கான புதிய தரப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம், கடன் பெறுபவர்களின் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் கடன் வழங்குபவர்களின் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதே ஆர்பிஐயின் முக்கிய நோக்கம் ஆகும். புதிய விதிகளின்படி, குறுகிய காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நகை அல்லது நாணயம் வடிவில் உள்ள தங்கம் மட்டுமன்றி வெள்ளியையும் பிணையாக வைத்து இனி கடன் பெற முடியும்.

ஊக வணிகம்

ஊக வணிகத்தை தடுக்கும் முயற்சி

இருப்பினும், ஊக வணிகத்தைத் தடுக்க, சுத்த தங்கம் அல்லது வெள்ளி மீது கடன் வழங்க அனுமதி இல்லை. அதேபோல, பிணையாக வைக்கப்பட்ட தங்கம்/வெள்ளியை மீண்டும் பிணையாக வைப்பதற்கோ, அல்லது தங்கம், வெள்ளி, அல்லது தங்கம் சார்ந்த பத்திரங்களை (ETFs) வாங்குவதற்குக் கடன் பெறுவதற்கோ அனுமதி இல்லை. சிறிய கடன்களுக்கு, தங்கத்தின் மதிப்பில் கடன் தொகைக்கான வரம்பு (LTV) 75% இலிருந்து 85% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வட்டி உட்பட மொத்தக் கடன் தொகை ₹2.5 லட்சம் வரை இருந்தால் இந்தக் கூடுதல் LTV வரம்பு பொருந்தும். மேலும், அசல் மற்றும் வட்டி இரண்டையும் ஒரே நேரத்தில் செலுத்தும் (Bullet Repayment) கடன்கள், இனி 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

முழு இழப்பீடு

சேதமடைந்தால் முழு இழப்பீடு

கடன் வாங்கியவர் அடகு வைத்த தங்கம் அல்லது வெள்ளி இழக்கப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, கடன் வழங்குபவர்கள் முழு இழப்பீட்டையும் வழங்க வேண்டும். கடனை மூடிய பிறகு, அடகு வைக்கப்பட்ட பொருட்களை அதே நாளில் அல்லது 7 வேலை நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும். தாமதமானால் ஒரு நாளைக்கு ₹5,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஏலத்தின்போது, அனைத்து விதிமுறைகளும் கடன் வாங்குபவரின் பிராந்திய மொழியில் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.