LOADING...
EMI கட்டவில்லை என்றாலும் போனை முழுமையாக முடக்கக் கூடாது: ஆர்பிஐ உத்தரவு
வங்கிகள் மற்றும் வசூல் ஏஜெண்டுகளுக்குக் கடுமையான விதிகளை அறிவித்துள்ளது RBI

EMI கட்டவில்லை என்றாலும் போனை முழுமையாக முடக்கக் கூடாது: ஆர்பிஐ உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2026
06:34 pm

செய்தி முன்னோட்டம்

மொபைல் போன் வாங்குவதற்காக வாங்கிய கடனை அல்லது அதன் தவணையை(EMI) உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாவிட்டாலும், வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ முழுமையாக முடக்கவோ அல்லது முடக்கச் செய்யவோ முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது புதிய வரைவு வழிகாட்டுதலில் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆர்பிஐ வெளியிட்டுள்ள கடன் வசூல் தொடர்பான இரண்டாவது வரைவு திருத்த வழிகாட்டுதலின்படி, மொபைல் போன் வாங்குவதற்காகக் கடன் பெற்று, அதனை 90 நாட்களுக்கு மேல் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில், குறிப்பிட்ட போனின் சில அம்சங்களைக் கட்டுப்படுத்த மட்டுமே வங்கிகளுக்கு அனுமதி உண்டு. அதுவும் கடன் ஒப்பந்தத்தில் இதற்கான விதிமுறை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே தொழில்நுட்ப ரீதியாக இந்த நடவடிக்கையை எடுக்க முடியும்.

விதிமுறை

RBI தெளிவுபடுத்திய விதிமுறை

இருப்பினும், தனிநபர் கடன், கார் கடன் அல்லது வீட்டுக் கடன்களை வசூலிப்பதற்காக வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்த ஒரு வங்கிக்கும் அதிகாரம் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. வங்கி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் போன் அம்சங்களைக் கட்டுப்படுத்தினாலும், சில மிக முக்கிய அத்தியாவசிய சேவைகளை எக்காரணம் கொண்டும் முடக்கக் கூடாது என ஆர்பிஐ நிபந்தனை விதித்துள்ளது. இணைய வசதி மற்றும் உள்வரும் அழைப்புகளை முடக்கக் கூடாது. SOS மற்றும் அரசின் அவசர அறிவிப்புகளைப் பெறுவதைத் தடுக்கக் கூடாது. வாடிக்கையாளரின் மொபைலில் உள்ள தனிப்பட்ட தரவுகளை பறிக்கக் கூடாது. வாடிக்கையாளர் நிலுவைத் தொகையைச் செலுத்திய 1 மணி நேரத்திற்குள் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும்.

விதிகள்

வசூல் ஏஜெண்டுகளுக்குக் கடுமையான விதிகள்

கடன் நிலுவை 60 நாட்களைத் தாண்டும் போது வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். மேலும், நிலுவையைச் சரிசெய்ய 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். கடன் வசூல் செய்யும் வங்கி ஊழியர்கள் மற்றும் ஏஜெண்டுகளின் அத்துமீறல்களைத் தடுக்க ஆர்பிஐ கடுமையான நடத்தை விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, ஏஜெண்டுகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது நேரில் செல்லவோ அனுமதிக்கப்படுவர். மிரட்டல், ஆபாச வார்த்தைகளைப் பேசுதல், பொதுவெளியில் அவமானப்படுத்துதல், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல் அல்லது குடும்பத்தினரை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும். இந்த புதிய விதிகள் குறித்து மே 31 வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement