
இனி காசோலையை பணமாக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை; அமலுக்கு வந்தது ஆர்பிஐயின் புதிய விதி
செய்தி முன்னோட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நாட்டின் காசோலை தீர்வு முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் முக்கிய சீர்திருத்தத்தை செயல்படுத்தி உள்ளது. முந்தைய காசோலை தீர்வு முறைக்கு இரண்டு வேலை நாட்கள் ஆகும் நிலையில், இன்று (அக்டோபர் 4) முதல், தொடர்ச்சியான தீர்வு (Continuous Settlement) அமைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், காசோலைப் பரிவர்த்தனைகள் சில மணி நேரங்களிலேயே முடிந்து, பணம் பெறப்படும் நாளில் அன்றே தீர்வு காணப்படும். இந்த விரைவான அமைப்பை ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் உடனடியாகப் பின்பற்ற தொடங்கி உள்ளன.
மோசடி
மோசடியை தடுக்கும் பாசிட்டிவ் பே சிஸ்டம்
இந்த புதிய கட்டமைப்பின் கீழ், வாடிக்கையாளர்கள் காசோலையில் உள்ள தொகை எழுத்து மற்றும் எண்களில் சரியாகப் பொருந்துவதையும், கையொப்பம் வங்கிப் பதிவுகளுடன் பொருந்துவதையும் உறுதி செய்யுமாறு வங்கிகள் வலியுறுத்தியுள்ளன. தவறான விவரங்கள் நிராகரிப்புக்கு வழிவகுக்கும். மோசடிகளைத் தடுக்கும் விதமாக, பாசிட்டிவ் பே சிஸ்டம் (Positive Pay System - PPS) முறையை வங்கிகள் தீவிரமாக ஊக்குவிக்கின்றன. ₹5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்கு PPS கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ₹50,000 க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த முறையின் கீழ், காசோலையை வழங்குவதற்கு 24 வேலை நேரங்களுக்கு முன்னதாகவே, வாடிக்கையாளர்கள் காசோலையின் முக்கிய விவரங்களை வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே காசோலை ஏற்கப்படும்.