முதல் தவணை தங்கக் கடன் பத்திரங்களுக்கான மீட்பு விலையை அறிவித்த ரிசர்வ் வங்கி
செய்தி முன்னோட்டம்
கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டிற்காகத் தங்கம் வாங்குபவர்கள், தங்கமாக வாங்காமல் தங்கக் கடன் பத்திரங்களாக வாங்கலாம் என்ற கருத்து பரவலாக அதிகரித்து வருகிறது.
தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் இந்திய மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவற்றைக் கொண்டு நிதி திரட்டும் வகையில் மத்திய அரசால் 2015ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே, தங்கக் கடன் பத்திர (Sovereign Gold Bond) திட்டம்.
8 வருட முதிர்வு காலத்துடன் வரும் தங்கக் கடன் பத்திரத்தின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரிப்பிடித்தம் எதுவும் இல்லை.
இந்நிலையில், முதன் முதலில் 2015ம் இத்திடத்தின் கீழ் வெளியிடப்பட்ட முதல் தவணை தங்கப் பத்திரங்கள் நவம்பர் 30ம் தேதி முதிர்வடைகின்றன.
முதலீடு
மீட்பு விலையை அறிவித்த ரிசர்வ் வங்கி:
எட்டு வருட முதிர்வு காலத்துடன் வரும் தங்களப் பத்திரங்களை நவம்பர் 30ம் தேதி முதலீட்டாளர்கள் மீட்பதற்கான மீட்பு விலையை அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
அதன்படி 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.6,132-ஐ முதல் தவணை தங்கப் பத்திர மீட்பு விலையாக அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் கிராம் ரூ.2,684 என்ற விலையில் தங்கப் பத்திரம் வழங்கப்பட்டது.
இந்த எட்டு ஆண்டுகளில், ஆண்டுக்கு 12.28% என்ற அளவில் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்திருக்கின்றன தங்கக் கடன் பத்திரங்கள்.
இந்த முதிர்வு கால லாபத்தைத் தவிர, தங்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணத்திற்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.