69 வயதில் சக்தி வாய்ந்த போர் விமானத்தை இயக்கிய ரத்தன் டாடா
உலகில் மிகவும் வெற்றிகரமான போர் விமானம் எனப் பெயர் பெற்றவை F-16 ரக போர் விமானங்கள். இந்த போர் விமானத்தை இயக்கிய முதல் இந்திய பொதுமக்களுள் ஒருவர் ரத்தன் டாடா. ஆம், 2007-ல் பெங்களூருவில் நடைபெற்ற ஏர் ஷோவின், 'F-16 ப்ளாக் 50' போர் விமானத்தின் துணை விமானியாகச் செயப்பட்டு அந்த விமானத்தை இயக்கியிருக்கிறார் ரத்தன் டாடா. அந்த போர் விமானத்தை இயக்கிய போது அவருக்கு வயது 69. ரூ.400 கோடி மதிப்புடைய அந்த போர் விமானம், சுமார் 2,000 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டது. அந்த விமானத்தில் சுமார் 40 நிமிடங்கள் செலவழித்த ரத்தன் டாடா, விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும் போது நடுவழியில் அதனை இயக்கியிருக்கிறார்.
F-16 போர் விமானத்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம்:
இந்த நிகழ்வு நடைபெற்று சரியாக 10 ஆண்டுகள் கழித்து, அதனை உருவாக்கிய லாக்ஹீடு மார்டின் நிறுவனத்துடன் 'F-16 ப்ளாக் 70' போர் விமானத்தை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தைக் கைப்பற்றுகிறது டாடா குழுமம். இது இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல்வேறு வகையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. மேலும், இந்தியாவை போர் விமான தயாரிப்பு தளத்தில் முக்கியமான இடத்திலும் நிறுத்தியது இந்த ஒப்பந்தம். இந்நாள் வரை 4,500-க்கும் மேற்பட்ட F-16 ரக போர் விமானங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 3,200-க்கும் மேற்பட்ட விமானங்கள் 26-க்கும் மேற்பட்ட நாடுகளில் பறந்து கொண்டிருக்கின்றன. இதுவரை உருவாக்கப்பட்ட போர் விமானங்களிலேயே மிகவும் வெற்றிகரமான போர் விமானம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன இந்த F-16 ரக போர் விமானங்கள்.